பக்கம் எண் :

27

4

நுல்4 (நெகிழ்ச்சிக் கருத்துவேர்)

துளைக்கப்பட்ட பொருள்கள் உளுத்த மரம்போற் கட்டு விட்டுப் போவதனாலும்; கையினாலும் கோலினாலும் எளிதாய்த் துளைக்கப்படும் அல்லது ஊடுருவப்படும் பொருள்களெல்லாம், நீருங் கூழும்போல் நெகிழ்ச்சிப் பொருள்களாகவே யிருப்பதனாலும், துளைத்தற் கருத்தினின்று நெகிழ்ச்சி அல்லது தளர்ச்சிக் கருத்துத் தோன்றிற்று.

உளு = புழு. உளுத்தல் = புழுத் துளைத்தல்.

ஒ.நோ.: துள் - தொள் - தொள - தொளர் - தளர்.

நுல் - நல் - நலி. நலிதல் = 1. மெலிதல். 2. சரிதல். 3. தோற்றல் (தோல்வியடைதல்). 4. அழிதல். “நண்ணா வசுரர் நலியவே” (திவ். திருவாய். 10 7 4).

நலி - நலிவு - நலிபு = மெலிந்த ககரமாகிய ஆய்தம். “நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்” (தொல். செய். 221).

நல் - நால். நாலுதல் = சரிந்து அல்லது தளர்ந்து தொங்குதல். “நான்ற முலைத்தலை நஞ்சுண்டு” (திவ். இயற். 1 18). 2. கழுத்திற் சுருக்கிட்டுத் தொங்கிச் சாதல். “நான்றியான் சாவலன்றே” (சீவக. 2513).

நால்வாய் = 1. தொங்கும் வாய். “நால்வாய்க் கரி” (திருக்கோ. 55). 2. தொங்கும் வாயுள்ள யானை.

நால் - நாலி = கோலுங் கொடுக்குமாய்த் தொங்குங் கந்தைத் துணி.

நுல் - நுள் - நொள் - நொள்கு. நொள்குதல் = 1. சுருங்குதல். “நூல் நொள்கிற்று” (நன். 454, மயிலை). 2. இளைத்தல் (யாழ். அக.).

நொள்கு - ஞொள்கு. ஞொள்குதல் = 1. மெலிதல் (திவா.). 2. குறைவுபடுதல். “புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி” (அகம். 31).