பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நெருநற்று - நேற்று. “நேற்றிரா வந்தொருவன் நித்திரையிற் கைப்பிடித்தான்” (காளமேகம்).

நெருநல் - நென்னல் = நேற்று. “நென்ன னோக்கி நின்றா ரொருவர்” (சிலப். 7, பாட். 45).

நென்னல் - நென்னற்று - நென்னேற்று. “காலைப் பிடிக்கா நின்ற நென்னேற்றும்” (திவ். திருப்பா. 16, வியா. 158).

நெர் - நெரி. நெரிதல் = 1. நெருங்குதல். “நெரிமுகைக் காந்தள்” (பரிபா. 14 13). 2. நெருங்கி யுரசி நொறுங்குதல். “தலைபத்து நெரியக் காலாற் றொட்டானை” (தேவா. 17

நெரி - நெரியல் - நெரிசல் = 1. நெருக்கமான கூட்டம். 2. நெரிந்தது.

நெர் - நெரு - நெருங்கு. நெருங்குதல் = 1. கிட்டுதல். 2. செறிதல். “நெருங்கு மடியார்களு நீயு நின்று” (திருவாச. 21 7). 3. நெருங்கிய உறவாதல். 4. ஒடுக்கமாதல்.

நெருக்கு - நெருக்கம் = 1. அருகன்மை. 2. நெருங்கிய வுறவு. 3. செறிவு. 4. ஒடுக்கம். 5. வேலைக்கடினம். 6. சடுத்தம் (அவசரம்). 7. வற்புறுத்தம். 8. நோய்க் கடுமை. 9. துன்பம்.

நெருக்கு - நெருக்கடம் = நெருக்கி யழுத்தும் நிலை.

நெருக்கு - நெருக்கடி = 1. நெருக்கும் மக்கட் கூட்டம். 2. சடுத்தநிலை. 3. வறுமைத் தொல்லை. 4. கடுந்துன்பநிலை.

நெரு - நெருள் = திணுங்கிய மக்கள் திரள். “யானை போகிற போக்கைப் பார், பார்க்கப் போகிற நெருளைப் பார்” (பழஞ் சொலவு).

நெர் - நேர். நேர்தல் = 1. நெருங்குதல். “வீரவாகு தலைவனை நேர்ந்து சொல்லும்” (கந்தபு. தருமகோப. 71). 2. தீண்டுதல். “குழவித் திங்கட் கோணேர்ந் தாங்கு” (பெரும்பாண். 384). 3. பொருந்துதல். “நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை” (தொல். எழுத்து. 134). 4. ஒத்தல். “கனியைநேர் துவர்வாயார்” (திருவாச. 5 27). 5. எதிர்ப்படுதல். (வெங்கைக்கோ. 321). 6. எதிர்தல். “வேந்தன் றனைநேர்ந்து காண்பானா” (இரகு. தசரதன். 21). 7. எதிர்த்தல். “தானையை நேர்ந்து கொன்று” (கம்பரா. மூலபல. 57). 8. உடன்படுதல். “அழும்பில் வேளுரைப்ப நிறையருத் தானை வேந்தனு நேர்ந்து” (சிலப். 25 178). 9. நிகழ்தல். இது தற்செயலாக நேர்ந்தது (உ.வ.). 10. நிரம்புதல். “நேரத் தோன்றும் பலரறி சொல்லே” (தொல். கிளவி. 7). 11. பொருத்தனை