பல் - பல்கு. பல்குதல் = 1. பலவாதல். “ஞாயிறு பல்கிய மாயமொடு” (பதிற். 62 6). 2. மிகுதல். “பல்கிய விரும்பினான்” (பிரமோத். பஞ்சா. 21). பல் - பல = 1. ஒன்றுக்கு மேற்பட்டவை. “பலவற் றிறுதி யுருபிய னிலையும்” (தொல். எழுத்து. உயிர்மயங். 18). பலகாரம் = பல சுவையுள்ள தின்பண்டம். 2. பழங்களெல்லா வற்றுள்ளும் பெரிய பலா. “பலங்கனி” (திவ். பெரியதி. 3 1 5). சி. பல (phala). பல - பலவு = பலா. “பலவுந் தெங்கும் வாழைகளும்” (திவ். திருவாய். 5 9 4). பல - பலா. “பலாப்பழத் தீயி னொப்பாய்” (திருவாச. 6 46). பல் - பர் - பரு. ஒ.நோ.: சில் - (சிர்) - சிறு. பருத்தல் = பெருத்தல். “பருத்த தோளும் முடியும் பொடிபட” (தேவா. 498 11). பரு - பருக்கன் = பரும்படியானது. பருக்கை = 1. பருமனாகை. 2. சோற்றவிழ். “பருக்கையிலாக் கூழுக்குப் போட வுப்பில்லை யென்பார்க்கும்” (தனிப்பா.). பருப்பொருள் = 1. நுண்பொருளல்லாத பரும்படிப் பொருள். “பருப்பொருட் டாகிய பாயிரம் (இறை. கள. 1, உரை). 2. சுவையற்ற செய்தி. “பதர்ச்சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கி” (பெருங். இலாவாண. 4 51). 3. மேலெழுந்த வாரியான பொருள். “பருப் பொருள் கடிந்து பொருட்டார்ப் படுத்து” (படுத்துப். உரைச்சிறப்.). பருப்பு = 1. பருமை. “பருப்புடைப் பவளம் போல” (சீவக. 2273). 2. சிறிதான அரிசியினும் பெரிய பயற்றுள்ளீடு. அரிசி x பருப்பு. அரி - அரிசி. தெ., க. பப்பு. பருமம் = 1. பருமை. 2. பதினெண் கோவை அரைப்பட்டிகை. “பருமந் தாங்கிய” (திருமுருகு. 146). 3. புடைத்திருக்கும் புட்டம் (யாழ். அக). பருமம் - பருமன் = 1. பருமை. 2. பருத்த - வன் - வள் - து (W.). பருமை = 1. பருத்திருக்கை. 2. பரும்படியான தன்மை. 3. முதன்மை. 4. பெருமை. பருமை - பருமி. ஒ.நோ.: ஒருமை - ஒருமி. பருமித்தல் = 1. பருத்தல். 2. பெருமை யடைதல். 3. எக்களிப்புடனிருத்தல் (W.). |