பக்கம் எண் :

81

9

புல்3 (திரட்டற் கருத்துவேர்)

பருத்தற் கருத்தினின்று திரட்டற் கருத்துப் பிறக்கும்.

பொழித்தல் = திரட்டுதல். பொழிப்பு = திரட்டு, பிண்டம். பொளி = திரண்ட வரப்பு. “பொளியை வெட்டி இரண்டு தளையும் ஒன்றாக்கினான்” (W.).

வரம்பு கட்டுதல், வரம்பு திரட்டுதல் என்னும் வழக்குகளை நோக்குக.

பொளி - பொழி = 1. கணு. “பொற்குடம் பொருந்திய பொழியமை மணித்தூண்” (பெருங். உஞ்சைக். 48 87). 2. வயல்வரம்பு, வரப்பு.

புல் - புள் - பிள் - பிழம்பு = 1. திரட்சி. “கடுந்தழற் பிழம் பன்ன” (திருவாச. 29 7). 2. வடிவு. “உண்மை யுணர்த்திப் பிழம்புணர்த்தப் படாதன” (இறை.கள. ப. 15). 3. உடல். “பிழம்புநனி யுலர்த்தல்” (தொல். புறத். 20, உரை).

பிள் - பிண்டு = 1. திரட்சி. 2. உடம்பு. “பிண்டாலம் வித்தின்” (திருமந். 3025).

ஒ.நோ.: கள் - கண்டு, நள் - நண்டு, சுள் - சுண்டு, வள் - வண்டு.

பிண்டு - பிண்டம் = 1. திரளை. 2. சோற்றுத் திரளை. “பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும்” (தொல். புறத். 8). 3. உண்டை (பிங்.). 4. தென்புலத்தார்க்குப் படைக்கும் சோற்றுண்டை. 5. சதைத்திரள். “உறுப்பில் பிண்டமும்” (புறம். 28). 6. உடம்பு. “உண்டி முதற்றே உணவின் பிண்டம்” (புறம். 18). 7. தொகுதி. “பரிவுதப வெடுக்கும் பிண்ட நச்சின்” (புறம். 184). 8. நூற்பிரிவுப் பொருளைப் பொதுப்படத் தொகுத்துக் கூறும் நூற்பா. “பிண்டந் தொகைவகை குறியே செய்கை” (நன். 20). 9. மூவுறுப்படங்கிய நூல். “மூன்றுறுப் படக்கிய பிண்டத்தானும்” (தொல். செய். 170).