(8) இனத்தொடர்புள்ள மக்களின் மொழிகள் சொல்லிலும் இலக் கண நெறிமுறையிலும் பெரும்பாலும் ஒத்தும், அத் தொடர்பில்லா மக்களின் மொழிகள் அவ்விரண்டிலும் பெரும்பாலும் ஒவ்வாதும், இருத்தல். (9) இற்றைஞான்றும், புதுக் கருத்துகளைக் குறிக்கும் புதுச் சொற்கள், ஒவ்வொரு மொழியிலும் தோன்றிக்கொண்டும் சேர்க்கப் பட்டுக்கொண்டும் வருதல். கருத்துகளைக் குறிக்கும் ஒலிக்குறிகளே சொற்கள்; கருத்துகள் வரவரப் பல்கி வருகின்றன. அநாகரிகக் காலத்தில் கருத்துகள் சில்கி யிருந்திருக்குமாதலின், அவற்றைக் குறிக்கும் சொற்களும் சில்கியே இருந்திருத்தல் வேண்டும். மொழி வளர்ச்சி ஒரு திரிந்தமைவு (Evolution) மக்கள் கற்றிருக்கும் ஒவ்வொரு கலையும், அதன் தொடக்க நிலையிலிருந்து மெல்லமெல்லத் திரிந்து வளர்ந்து நீண்ட காலத் திற்குப் பின் நிறைவடைந்ததேயன்றி, ஒரேயடியாய்த் தோன்றிய தன்று. இதனை ஈரெடுத்துக் காட்டுகளால் விளக்குவாம். இதுபோது மக்கள் பயிலும் கலைகளுள் ஆசிரியப் பயிற்சியும் ஒன்றாம். ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளும் கல்லூரிகளும் தோன்று முன், ஆசிரியத் தொழிலிற் புகும் ஒவ்வொருவரும் தத்தம் ஆசிரியர் தமக்குக் கற்பித்த முறையில் ஒரு கூற்றையன்றி வேறொன்றும் அறியாதவராயிருந்தனர். அதனால், அவரது ஊழிய முற்பகுதியில் மாணவ ருளங்கொளக் கற்பிக்கும் ஆற்றலற்றவரா யிருந்தனர். தற்காலக் கற்பிப்பு முறையில் ஒரு பகுதியை அஃதாவது நுவற்சி நெறி முறைகள் சிலவற்றைக் கண்டறிதற்கும், அவர்க்கு நீண்ட காலஞ் சென்றது. ஆகவே, அவருடைய பிற்கால மாணவரே அவர் கற்பிப்பால் பெரும் பயன் பெறமுடிந்தது. ஆயின், ஆசிரியப் பயிற்சி ஏற்பட்டபின்போ, ஆசிரிய வூழியத்தை மேற்கொள்ள விரும்பும் ஒவ்வொரு மாணவரும், அவ்வூழியத்தைத் தொடங்கு முன்னரே, நுவற்சி நெறிமுறைகளெல்லாவற்றையும், ஆசிரியப்பயிற்சி வாயிலாய் ஒருங்கே அறிந்துகொள்கின்றனர். அந் நெறிமுறைகளெல்லாம் ஒருவராலேயே அல்லது ஒரே தலைமுறையில் கண்டுபிடிக்கப் பட்டவையல்ல. பல நூற்றாண்டுகளாக, பற்பல நுண்மாண் நுழைபுல ஆசிரியரால், ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கப்பட்ட நுவற்சி நெறி முறைகளின் தொகுதியே, இற்றை ஆசிரியப் பயிற்சியாகும். |