பக்கம் எண் :

105

(மொள்) - மொண் - மொண்ணை = மழுக்கம், கூரின்மை.

மொண்ணை - மண்ணை = மழுக்கம்.

மண்ணை - மணை = மழுக்கல், மழுங்கலாய்தம்.

மணை - மணையன் = மழுங்கலாய்தம்.

ix. மதிமுட்டு

மதியானது கூரிய கண்போன்றிருத்தலால், மடமை அதன் மழுக்கமாகக் கூறப்படும். கூரிய மதிக்குக் கூர் என்றே பெயர்.

கூழை = குட்டையானது, மதிக்குறைவு.

“கூழை மாந்தர்தஞ் செல்கதி”                   (தேவா. 462: 9)

முட்டு - முட்டாள். முட்டு - முட்டன் = மூடன்.

முட்டு - (முட்டி) - மட்டி. முட்டு - மொட்டை - மட்டை = மூடன். முண்டு = மடமை. முண்டம் = அறிவில்லாதவன்.

x. மதிமழுக்கம்

மொண்ணை = கூரின்மை. மொண்ணையன் = அறிவு மழுங்கியவன்.

மொண்ணை - மண்ணை = மழுக்கம், மடமை. மணையன் = மதிக்கூர்மையற்றவன்.

மழுக்கு - மக்கு = மதியற்றவன். மழுக்கட்டை - வழுக்கட்டை = மதிமழுக்கம், மூடத்தனம்.

முண்டு - மண்டு = மதியற்றவன்.

xi. மொட்டையாதல்

முனைமழுங்கியது மொட்டையாகும்.

மொட்டையாதல், உண்மையாய் மொட்டையாதலும், அணி வகையில் மொட்டையாதலும் என இருவகை.

உடம்பிற்குத் தலையின்மையும், தலைக்குப் பாகை மகுட மின்மையும், மண்டைக்கு மயிரின்மையும், உறுப்பிற்கு அணியின்மையும், மேலுக்கு ஆடையின்மையும், நிலத்திற்குப் பயிரின்மையும், முடங்கலுக்குக் கையெழுத்தின்மையும், மரத்திற்குக் கிளையின்மையும், கொம்புள்ள விலங்கிற்குக் கொம்பின்மையும், வாலுள்ள உயிரிக்கு வாலின்மையும், வாலிற்கு அதன் நுனியின்மையும், இவை போல்வன பிறவும், மொட்டைமையாகக் கருதப்படும்.