இழுத்தெறிதலும், சிறங்கையால் ஒரு பொருளை இழுத்துத் தள்ளுதலும், இவை போல்வன பிறவும், வினையிலும் விளைவிலும் கத்தி வழித்தலை ஒத்திருத்தலால், அவையும் வழித்தல் எனப்படும். வடித்தல் = நாவழித்தல், நாவைத் திருத்துதல். “வடியா நாவின் வல்லாங்குப் பாடி” (புறம். 47) வழி - வடி - வார். வடித்தல் = தலைமயிரை வாருதல். “வடிக்கொள் கூழை” (நற். 23) வார்தல் = உரிதல் (அகம். 69), வழித்தள்ளுதல், கூட்டுதல், தலைமயிரைச் சீவுதல். வாரி = சீப்பு, குப்பைவாரி முதலிய வாருங் கருவி. சிக்குவாரி சிணுக்குவாரி என்பன தலைமயிர் வாருங் கருவிகள். வார்கோல் - விளக்குமாறு. வாரியன் = களத்தில் நெல்லைக் கூட்டிக் குவிப்பவன், அங்ஙனம் குவித்தலை மேற்பார்க்கும் அலுவலாளன் பள்ளர் ஊராண்மையில் ஆள்களைக் கூட்டுபவன். வாரியம் - வாரியன் = தொழில் மேற்பார்வை, மேற்பார்வைக் குழு. கும்ப அளந்த படியின் மேலுள்ள கூம்பிய பகுதியைக் கையால் தட்டுதலும் வழித்தலை ஒத்திருத்தலால், தலைதட்டி யளத்தலைத் தலைவழித்தல் என்பர். அளக்கப்படும் பொருள் நீர்ப்பொருளாயின் படிமட்டத்திற்குமேல் கூம்பா தொழுகுமாதலின், அது வழிதல் என்னுந் தன்வினையாற் கூறப்படும். கொள்கலங்களிலும் ஏரி குளம் போன்ற கொள்ளிடங்களிலும் நீர் நிரம்பி யோடுதலை வழிந்தோடுதல் என்பது, இம் முறைபற்றியே. xiv. வடித்தல் வழி - வடி. சோறு வெந்தபின் நீரை வழியச்செய்தல் வடித்தல் எனப்படும். தானாய் வழிந்தோடாத நீரைக் கலத்தைச் சாய்த்து வழியச் செய்வது வழித்தலினும் வேறுபட்டதாதலின், வடித்தல் எனப்பட்டது. பொருள் வேறுபாட்டைச் சொல் வேறுபாடு குறித்தது. ஏரி குளங்களில் நீர் நிரம்பித் தானாய் வழியாது மடை அல்லது கலிங்கு வழியாய்ப் பாயுமாயின், அதுவும் வடிதல் எனப்படும். அங்ஙனம் பாய்ச்சுதல் வடித்தல் எனப்படும். கூழுங் கஞ்சியும் போன்ற நெகிழ்பொருள் தானாய் வழிதலையும் வடிதல் என்பர். வடி-வார். ஒரு கலத்தினின்று நீரை ஊற்றுதலும் ஓர் உலோகத்தைக் காய்ச்சி யூற்றுதலும் வடித்தல் அல்லது வார்த்தல் எனப்படும். கண்ணீர்போலத் தானாய் வடிதல் வார்தல் எனப்படும். |