சட்டுவம் - சருவம். சட்டம் = தட்டையான பனையோலை. சட்டம் வாருதல் = ஓலையின் அருகுகளை அரிந்து எழுதுவதற்கு ஏற்றதாக்குதல். சட்டம் - சட்டன் = ஓலைச்சுவடி பயிலும் மாணவன். சட்டன் + நம்பி = சட்டநம்பி = மாணவர் தலைவனாகிய ஆசிரியன், தலைமை மாணவன். சட்டநம்பி - சட்டம்பி. சட்டநம்பிப்பிள்ளை - சட்டம்பிப்பிள்ளை - சட்டாம்பிள்ளை. சட்டம் = மரச்சட்டம், கோடிழுக்கும் சட்டப்பலகை, நேர்மை, செப்பம், முறைமை, நீதியொழுங்கு, வரம்பு, விதி. மாணவர் பார்த்து ஒழுங்காக எழுதுவதற்கு மேல்வரியில் வரையப்பட்டிருப்பது மேல்வரிச் சட்டம் எனப்படும். ஓர் அமைப்பகத்தின் கரும நடப்பிற்குரிய விதியொழுங்கு முழுவதும் சட்டதிட்டம் எனப்படும். சட்டம் = விதி, விதிக்கும் அதிகாரம், அதிகாரத்தாற் பெற்ற வுரிமை. “இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளைதினம் இருபோ ருண்ணும் சட்டமுடன் கொள்ளுண்ணும்..........” (வேதநாயகம்பிள்ளை தனிப்பாடல்) சட்டம் - சடங்கு = மதவிதிப்படி அல்லது ஒழுக்க விதிப்படி நடைபெறும் கரணம். சட்டம் = படம் கண்ணாடி முதலியவற்றின் நாற்புறமுங் கோக்கப்படும் மரச்சட்டம். சட்டக் கட்டில், சட்டக் கதவு, சட்டப் பரம்பு, சட்ட வாள் முதலியன நாற்புறமுஞ் சட்டங் கோத்தவை. சப்பரம், முகடு முதலியவற்றிற்குச் சட்டங்கட்டுதல் ஆயத்த வினையாயிருத்தலின், சட்டங் கட்டுதல் என்பது ஆயத்தஞ் செய்தல் என்று பொருள்படும். உடம்பு உயிருக்குச் சட்டம்போன்றிருப்பதால், அதுவும் சட்டம் எனப்படும். சட்டம் - சட்டகம் (frame, outline). சட்டம் - சட்டை = உடம்பு, உடம்பின் மீந்தோல், அதுபோன்ற மெய்ப்பை. |