குறுக்கன் - குக்கன் - குக்கல் = குறுநாய். குள் - (கள்) - கண் = சிறியது. கண் விறகு = சிறு விறகு (தஞ்சை வழக்கு). கண்ணறை = சிற்றறை. கண்ணாறு = சிற்றாறு. கண்வாய்க்கால் = சிறு வாய்க்கால் கண் - கண்டு = துண்டு. கண்டறைவாள் = துண்டறுக்கும் வாள். கண்டு - கண்டம் = துண்டம், சிறுநிலம், நிலப்பகுதி. கண்டங் கண்டமாய் நறுக்கவேண்டும் என்பது வழக்கு. காய்ந்த கறித்துண்டு உப்புக் கண்டம் எனப்படும். கண்டம் - காண்டம் = நூற்பகுதி. கண்டு - கண்டி. கண்டித்தல் = துண்டித்தல், பகிர்தல், துண்டித்தல் போற் பேசுதல். கண்டி - கடி. கடிதல் = கண்டித்தல். கண்டி - கண்டனம். குள் - குட்டம் = சிறுமை, குறுமை, சீர் குறைந்த அடி. குட்டான் = சிறிய ஓலைப்பெட்டி, சிறு படப்பு. குள் - குண் - குணில் = குறுந்தடி. குள் - கு = குறிய, சிறிய. ஒ.நோ: நல் - ந. சுள் - சிறுமை. சுள்ளாணி = சிறிய ஆணி. சுள் - சுண்டு = சிறியது, சிறிய முகவைக் கருவி (வீசம்படி). சுண்டு - சுண்டான் = சிறு மொந்தை. சுண்டெலி சுண்டுவிரல் முதலிய புணர்ப்பெயர்களில், சுண்டு என்பது சிறுமையைக் குறிக்கும். சுண்டு - சுண்டை = சிறிய காய்வகை. சுண்டு - சிண்டு = சிறிய குடுமி. சுள் = (சுட்டு) - சிட்டு = சிறியது, சிறு குருவி. சிட்டு - சீட்டு = ஓலை நறுக்கு. சிட்டு - சிட்டி = சிறுகலம். சுல் - சல் - சல்லி = சிறியது, சிறு காசு. ஓட்டாஞ்சல்லி, சல்லிக்கல், சல்லிப்பயல், சல்லிக்கட்டு முதலிய புணர்ப்பெயர்களில், சல்லி என்பது சிறுமை குறிக்கும். |