சுல் - சுல்லி = அடுப்பு, அடுக்களை, மடைப்பள்ளி. சுள் - சுளுந்து = தீப்பந்தம். சுள் - சுண்டு - சுண்டான் = தீப்பந்தம். புள் - புழுங்கு. புழுங்குதல் = எரிதல். புகைதல் = எரிதல். பொள் - பொசு - பொசுங்கு - பொசுக்கு (பி.வி.). பொசுங்குதல் = எரிதல். முள் - முளி. முளிதல் = எரிதல். முள் - வெள் - வெட்டை = உடம்பிலுள்ள சூட்டுவகை. வெள் - (வெட்கை) - வெக்கை. வெள் - வெய் - வெய்யில் - வெயில். வெய் - வெய்யோன். வெய் - வெயர் - வெயர்வை. வெயர் - வேர் - வேர்வை. வெயர் - வியர் - வியர்வை. வெய் - வே - வேகு. வேகு - வேகம் = கடுமை. வே - வெந்தை. வே - வேன் - வேனல் - வேனில். வே - வேம் - வேம்பு = சூட்டை யுண்டாக்கும் பழமரம் அல்லது வேனிலில் தழைக்கும் மரம். வேம் - வேங்கை = வேகும் இடம்போல் தோன்றும் விலங்கு. வெய்ம்மை - வெம்மை. வெம் - வெம்பு - வெப்பு - வெப்பம். வெம்பு - வெம்பல். வெள் - வெது - வெதும்பு - வெதுப்பு. இனி, உ-அ திரிவுப்படி உல் அடியினின்று பிறந்த அன்று அனல் அழல் முதலிய சொற்களும், குல் அடியினின்று பிறந்த கன்று கனல் முதலிய சொற்களும், துல் அடியினின்று பிறந்த தழல் (தணல்) என்னும் சொல்லும் உளவென அறிக. iii. விளங்குதல் எரிவது விளங்கும். எரியாத பொருள்களின் விளக்கமும் ஒருபுடை யொப்புமைபற்றி விளக்கமெனவே படும். |