புழுங்கு - புழுக்கு - புழுக்கல். பொள் - பொரி - பொரியல். பொரி = பொரிந்த அரிசி. பொள் - பொசு - பொசுங்கு - பொசுக்கு. பொசுக்குதல் = சுடுதல். பொசுக்கு - பொதுக்கு. பொதுக்குதல் = வாழைக்காயைச் சுட்டுப் பழுக்கவைத்தல். vi. உலர்தல் வெயிலிலும் நெருப்போரத்திலும் காயும் ஈரப் பொருள்கள் உலரும். உல் - உல. உலத்தல் = காய்தல். உல - உலவை = காய்ந்த மரம். உல - உலர் - உலறு. உள் - உண் - உண. உணத்தல் = உலர்தல். உண - உணங்கு. உணங்குதல் = உலர்தல் உணங்கு - உணக்கு (பி.வி.). (உல் - எல்-) எரி - எரு = காய்ந்த சாணம். குல் - கல. கலகலத்தல் = நன்றாகக் காய்தல். (குள் - கள் - காள்) - காய்தல் = உலர்தல். சுள் = கருவாடு. சுள் - சுள்ளி = காய்ந்த குச்சு. சுள் - சுட்கு. சுட்குதல் = வறளுதல். சுட்கு - சுட்கம் = வறண்டது. சுட்கு - சுக்கு = காய்ந்த இஞ்சி. சுக்கு - சுக்கல் = காய்ந்தது. சுக்குதல் = உலர்த்தல். சுள் - சுண்டு - சுண்டி = சுக்கு. சுண்டு - சண்டு = காய்ந்த புல்தாள். சுள் - சுர் - சுரி. சுரித்தல் = வற்றுதல். சுர் - (சர்) - சரக்கு = காய்ந்த பொருள். (சர்) - சருகு = காய்ந்த இலை. சும்பு - சுப்பு - சுப்பல் = சுள்ளி. சுப்பு - சுப்பி = சுள்ளி. சுப்பு என்பது விரைந்து நீர்வற்றுதற் குறிப்பு. சுள் - சுரு - சுரி. சுரித்தல் = வற்றுதல். “நெருப்பிடைச் சுரிக்க நீட்டும்” (கம்பரா. இரணிய. 737) |