வறுங்கூவல் = நீரில்லாக் கிணறு. ‘ஒருநாளும் போகாதவன் திருநாளுக்குப் போனானாம். திரு நாளும் வெறுநாளாய்ப் போனதாம்’ என்பது பழமொழி. வெறு நாள் = (சிறந்த) நிகழ்ச்சியற்ற நாள். xx. வீண்மை பயனில்லா வெறுமை வீண்மை. விள் - வீண். வெள் - வெட்டி. வெட்டிவேலை = பயனற்ற வேலை. வீண் வேலை. வெட்டியாள் = வேலை செய்யாத ஆள். வெள் - வெறு. வெறும் பேச்சு = பயனற்ற பேச்சு. வெறு - வறு - வறிது = வீணானது, வீணாக. xxi. வெளி வானவெளி ஒன்றுமற்ற வெற்றிடமாதலால், அல்லது வெற்றிடமாய்த் தோன்றுதலால், அது வெறுமை யுணர்த்துஞ் சொற்களாற் குறிக்கப்பெற்றது. விள் - விண் = ஆகாயம். விண் - விண்டு = ஆகாயம். விள் - (விசு) - விசும்பு. விள் - வெள் - வெளி = ஆகாயம். வெள்ளிடை = வெறுமையான இடம். “வறிது நிலைஇய காயமும்” (புறம். 20) xxii. வெளிப்பாடு வெளிப்பாடாவது ஒன்று இன்னொன்றன் உள்ளிருந்து வெளி வருதல். விள்ளுதல் = வெளிவிட்டுச் சொல்லுதல். விள் - விளம்பு - விளம்பரம். விள் - விடு. விடுதல் = வெளிவருதல், பிஞ்சு விடுதல். இந்த மரம் பிஞ்சு விட்டிருக்கிறது என்பது வழக்கு. |