பக்கம் எண் :

27

2

சுட்டொலிக் காண்டம்

1. சுட்டுக் கருத்து வளர்ச்சிப் படலம்

மொழி வரலாற்றில், முதன்மையாய்க் கவனிக்க வேண்டிய மூன்று காலங்கள் உள. அவை, சைகைக் காலம், குறிப்பொலிக்காலம், சுட்டொலிக் காலம் என்பன.

விலங்கும் பறவையும்போல உணர்வொலிகளை மட்டுங் கொண்டு, அவற்றால் உணர்த்த முடியாத பிற கருத்துகளை யெல்லாம் சைகைகளைக்கொண்டே உணர்த்திய காலம், சைகைக் காலமாகும். இச் சைகை முறையைச் சைகைமொழி (Gesture language) என்பர். சிறுபான்மை சைகைகளைத் துணைக்கொண்டு, உணர்வொலி முதலிய ஐவகைக் குறிப்பொலிகளையுங் கையாண்ட காலம், குறிப்பொலிக் காலமாகும். இக் குறிப்பொலி மொழியை இயற்கை மொழி (Natural language) என்பர். குறிப்பொலிகளுடன் சுட்டொலி களையுங் கையாண்டு, அவற்றினின்று பல்லாயிரக்கணக்கான சொற் களைத் திரித்துக்கொண்ட காலம், சுட்டொலிக் காலமாகும். சுட்டொலி கள் தோன்றியபின்னரே மொழி வளர்ச்சியடையத் தொடங்கிற்று. இது போதுள்ள தமிழ்ச்சொற்களில், நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு சுட்டொலியடிச் சொற்களே. உண்மையில் சுட்டொலியடிச் சொற் றொகுதியே மொழியெனினும் இழுக்காகாது. சுட்டொலிகள் தோன்றிய பின் சொல் வளர்ச்சியடைந்த மொழியைப் பலுக்கு மொழி (Articulate language) என்பர். இதுவே மொழியெனச் சிறப்பித்துச் சொல்லப் படுவது. ஆகவே, சுட்டொலித் தோற்றம் முற்கால மொழியாகிய திருந்தா மொழிக்கும் பிற்கால மொழியாகிய திருந்திய மொழிக்கும் இடைப்பட்ட எல்லைக் கோடாகும்.