பக்கம் எண் :

29

குறிலும் குறிலின் நீட்டம் நெடிலுமாதலின் ஆ, ஈ, ஊ எனினும் அ, இ, உ எனினும் ஒன்றே. குறிலினும் நெடில் ஒலித்தற் கெளிதாதலானும், குழந்தைகள் குறில்களைப் பெரும்பாலும் நெடிலாகவே யொலித்த லானும், குழந்தை நிலையிலிருந்த முந்தியல் மாந்தன் வாயில் நெடில்களே முந்திப் பிறந்திருத்தல் வேண்டும்.

வாயினால் சேய்மை அண்மை முன்மை ஆகிய மூவிடங்களையும் சுட்டவேண்டுமாயின், இன்றும் மேற்கூறிய மூவகையி லல்லது வேறுவகையில் சுட்ட முடியாது. அம் மூவகைச் சுட்டுநிலையில் ஆ, ஈ, ஊ தவிர வேறெழுத்தொலிகளையும் பிறப்பிக்க முடியாது. சேய்மையைச் சுட்ட வேண்டுமாயின் வாயை விரிவாய்த் திறத்தல்வேண்டும். அந் நிலையில் ஆகாரந்தான் ஒலித்தற்கியலும். சேய்மைக்குப் பின்மையாகிய அண்மையைச் சுட்டவேண்டுமாயின் வாயைப் பின்னோக்கி யிழுத்தல் வேண்டும். அந்நிலையில் ஈகாரம்தான் ஒலித்தற்கியலும். முன்மையைச் சுட்ட வேண்டுமாயின் வாயை முன்னோக்கிக் குவித்தல் வேண்டும். அந் நிலையில் ஊகாரந்தான் ஒலித்தற்கியலும். ஆகவே, சுட்டொலிகள் மூன்றும் கணிதம்போல் அளவைப்பட்டனவும், திட்டமானவும், எவ்வகையிலும் மாறாதனவும் ஆகும்.

ஆகார ஈகாரச் சுட்டுகளை இக்கால மக்கள் முந்தியல் மாந்தர் போல் ஒலிப்பதில்லை. ஊகாரச் சுட்டு இதழ் குவிந்தொலிப்பதாதலின், அதை ஓரளவு முன்னோரொத் தொலிக்கலாம். ஆயின், அது இன்று வழக்கற்றது.

சைகைக் கால மாந்தர் கைச் சைகையால் சேய்மை யண்மை முன்மையிடங்களைச் சுட்டி வந்தது போன்றே, சுட்டொலிக்கால மாந்தரும் வாய்ச் சைகையாற் சுட்டி வந்தனர். முச்சுட்டுகளையும் ஒலிக்கும்போது, அவர் வாய்ச்கைகையை முதன்மையாய்க் கவனித்தனரேயன்றி, அவ்வொலிகளை யன்று. அறுவகை யொலிகளினின்றும் சொற்கள் தோன்றி மொழி வளர்ச்சியுற்ற பின்னரே, மக்கள், வாய்ச் சைகை யுணர்ச்சியின்றி ஒலிகளையே அல்லது சொற்பொருளையே நோக்கி வருகின்றனர்.

சுட்டொலிகள் தோன்றிய காலம் அசைநிலைக் காலமாதலின், அன்று அவை வாய்ச்சைகை யொலிகளாகவேயிருந்து செவ்வையாய்ப் பலுக்கப்பட்டன. பின்பு ஈரசைச் சொற்களும் மூவசைச் சொற்