பக்கம் எண் :

45

முகம் - முகப்பு = முன் மண்டபம், முனைப்பகுதி.

முகம் - முகன் - முகனை - மோனை = சீர்களின் முதலிடம், அவற்றின் முதலெழுத்துகள் ஒன்றிவரல், முகப்பு.

முகம் - முகர் - முகரி = முன்புறம்.

முந்து - முந்தி = முன்றானை.

முன் - முனை. (போர் முனை - war front)

முன்று - (முன்றம்) - முற்றம். (முன்று + இல் = முன்றில்.)

இனி, குவிந்த அல்லது கூரிய பொருள்களின் முற்பகுதியைக் குறிக்குஞ் சொற்களாவன:

குனை - கொனை = நுனி (வடார்க்காட்டு வழக்கு.)

துள் - தூய் = நுனி.

நுதி - நுனி.

(நுன்) - நுனி, நுனை.

முன் - முனி, முனை.

முள் - முளை = முனை.

(2) முன்னுறலியல்

(1) தோன்றுதல்

ஒன்றினின்று இன்னொன்று முன்வருதலே தோன்றுதலாதலின், முன்மைக்கருத்தில் தோன்றுதற் கருத்துப் பிறந்தது. ஒரு பொருள் எத்திசையில் தோன்றினும், அதன் முகத்தை நோக்க அது வருந்திசை அதற்கு முன்மையாதல் காண்க. இதனால், தோன்றுதலை முகஞ் செய்தல் என்று கூறும் வழக்கையும், நோக்குக.

முன்மை என்பது முன்னாகவுள்ள நிலைமையையும், முன்னுறல் என்பது முன்வரும் இயக்கத்தையும், குறிக்குமென வேறுபாடறிக.

“உண்மை வினைவந் துருத்தலொழி யாதெனும்”       (மணிமே. 26:82)

உருத்தல் = தோன்றுதல் (உ.வே. சா. உரை.)

“ஊழ்வினை யுருத்துவந் தூட்டும்”                        (சிலப். பதிகம்,. 52)

உருத்து = வெளிப்பட்டு (அரும்பதவுரை)

உருத்து = உருக்கொண்டு (அடியார்க்கு நல்லாருரை.)