பசு - பாசு - பாசம் (moss). பாசு - பாசி = பாசம், பச்சைப்பயறு. துள் - துளிர் - தளிர். பசு - (பசி) - (பயி) - பை. பைமை = பசுமை, இளமை, மென்மை. “அகர இகரம் ஐகார மாகும்” (தொல். 54) பை - பைத்து = பசுமை. பை - பையல் = இளைஞன், சிறுவன். பையல் - பையன். பையல் - பயல் - பயன் - பசன். பை - பைது - பைதல் = பையன், குழவி. பை - பயிர் = பச்சையான புல்செடிகொடி. பயிர்பச்சை, பைங்கூழ் என்பன வழக்கு. பை - பயறு = பச்சைப்பயறு, பிறபயறு, பயறு, பயறுபச்சை என்பது வழக்கு. பயறு - பயறி = பயற்றம்மை. (6) மென்மை இளமையில் எவ்வுயிரியும் மென்மையாயிருப்பதால், இளமைக் கருத்தில் மென்மைக் கருத்தும் தோன்றும். குதலை = மென்மை, மென்மொழி. மழ - மழமழப்பு = மென்மை. மழலை = மென்மை, மென்மொழி. மழறுதல் = மென்மையாதல். மழ - மத - மட - மடம் = மென்மை. பைமை = பசுமை, இளமை, மென்மை. பைய = மெல்ல. பையப் பைய - பயப்பய - பைப்பய. பை - பையா. பையாத்தல் = சிறுமைப்படுதல், துன்பத்தைத் தாங்கமுடியாவாறு மென்மையாதல், துன்புறுதல். பையுள் = துன்பம். (7) முன்தள்ளிவருதல் தோன்றிய பொருள் முன்னாக நீண்டுவருதல் முன் தள்ளி வருதலாகும். துந்து - துந்தி = முன்தள்ளிய வயிறு. துந்தி - தொந்தி. துருத்துதல் = முன்தள்ளுதல். வயிறு துருத்திக்கொண்டிருக்கிறது என்பது தென்னாட்டு வழக்கு. |