உயர்திணையிலும் இயங்குதிணையான அஃறிணையிலும், பிள்ளையை அல்லது குட்டியை ஈனும் தாய் குலைதள்ளும் அல்லது காயீனும் மரத்தைப்போ லிருப்பதால், தாய்க்குத் தள்ளை என்று பெயர். ஒரு பெண்டு பிள்ளை பெற்றால், அவள் புகுந்தகத்திற்கு அல்லது கணவன் குடிக்கு ஒரு பிள்ளை தந்ததாகக் கருதப்படுவாள். மகப் பெறுதல் தருதல் எனப்படும். “புயங்கமெலாஞ் சுதையென்னு மாது தந்தாள்” (கம்ப. சடாயுகாண். 28) பிள்ளை பெறுவதில் தாய் தந்தையர் இருவர் வினையுங் கலந்திருத்தலால், அவ் விருவருக்கும் தா என்பது பொதுப் பெயராம். ஆயினும் ஈன்றாளுக்கு ஆய், தாய் (தம் + ஆய்) முதலிய தனிப் பெயர்கள் வழங்குதலாலும், பிள்ளையைத் தோற்றுவிப்பவன் தந்தையே யாதலானும், தா என்பது பெரும்பாலும் தந்தையையே குறிக்கும். தாதா - தாத்தா = தந்தையின் தந்தையாகிய பாட்டன். தாதா - தாதை. புகுந்த குடிக்குப் பிள்ளையைத் தருபவள் தாயென்றும், மனைவிக்குப் பிள்ளையைத் தருபவன் தந்தை யென்றும், வேறு பாடறியப்படும். தந்தை தருவது விந்து நிலை; தாய் தருவது பிள்ளை நிலை. (9) முற்செலவு நுதலுதல் = முற்கூறுதல், கூறித் தொடங்குதல். நுதலிப்புகுதல் = இன்னது கூறுவேன் என்று கூறப்போகும் பொருளைச் சொல்லித் தொடங்கும் நூலுத்தி. தூது = முன்விடுக்கும் செய்தி, அச் செய்தி சொல்பவர். தூது - தூதன் - தூதுவன். அரசரும் காதலரும் ஒருவரொருவரிடைச் செல்வதை முன்னறிவித்தற்காக விடுக்கும் செய்தியே, முதன் முதல் தூது எனப்பட்டது. பின்பு அது செய்தி என்னும் பொதுப்பொருளில் வழங்கத் தலைப்பட்டது. கண்ணன் தூது, அங்கதன் தூது முதலியவற்றை நோக்குக. |