பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உகளுதல்=தாவுதல். உகளித்தல்=குதித்தல்.

குதித்தல்-தாவுதல், தாண்டுதல், கடத்தல், கூத்தாடுதல்.

குதி-குதிரை = தாவிச் செல்லும் விலங்கு.

“கூற்றங் குதித்தலுங் கைகூடும்”                        (குறள். 269)

என்பதில், குதித்தல் கடத்தல் (வெல்லுதல்.)

குதி - கூத்து - கூத்தன்.

துள்ளுதல் = குதித்தல். துள்ளல் = கூத்தன்.

துள் - துள்ளி - துளி = துள்ளிவிழும் நீர்த்திவலை, சிற்றளவு. துள் -துள்ளம் = துளி. துளி - துமி.

(தூண்டு) - தாண்டு. தாண்டுதல் = தாவுதல், குதித்தல், கடத்தல்.

“தாய் எட்டடி தாண்டினால் குட்டி பதினாறடி தாண்டும்” என்பது பழமொழி.

தாண்டு - தாண்டவம் = கூத்து.

தாண்டு - தாண்டகம் - 24 எழுத்து ஆகிய அளவைத் தாண்டிச் செல்லும் அடிகளைக்கொண்ட செய்யுள்.

துமுக்கு (தெ.) = தாண்டு.

(தூவு) - தாவு. தாவல் = தாண்டுதல்.

(4) தெளித்தல்

தெளித்தலாவது ஒன்றை அள்ளி முன்னாக எறிதல் அல்லது இடுதல். நீரைத்தெளிக்கும்போது அது துளித் துளியாகத் துள்ளி விழுதலால், துள்ளுதற் கருத்தில் தெளித்தற்கருத்துப் பிறந்தது.

உகுதல் = முன்துள்ளி விழுதல், சிந்துதல், உகுத்தல் (பி. வி.) = சிந்துதல்,தூவுதல்.

துளித்தல் = துளி விழுதல் (த.வி.); துளிகளைச் சிந்துதல், தெளித்தல், தெறித்தல், இறைத்தல்,
சிந்துதல் (பி. வி.).

துளி - தெளி. தெளித்தல் = துளித் துளியாய்ச் சிந்துதல்; மலர், அரிசிமுதலியவற்றைச்
சிற்றளவாய்த் தூவுதல்.

தெளி - தெறி. தெறித்தல் = துளி துள்ளி விழுதல், துள்ளுதல், விரலினால்ஒன்றை முன்னோக்கிச் சுண்டுதல் அல்லது துள்ளச் செய்தல்.