பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

விசு - விசிறு - விசிறி - சிவிறி. விசிறுதல் = வேகமாய் வீசுதல், வீசி யெறிதல்.

விசு - விசுக்கு. விசுக்குதல் = விரைந்து கைவீசுதல், விசிறுதல். விசுக்குவிசுக்கென்று நடக்கிறான் என்பது வழக்கு.

விசு - வீசு. வீசுதல் = வீசியெறிதல், வாரிக்கொடுத்தல், நீளுதல், மிகுதல், நீளவாசனை வருதல்.

வீசு - வீச்சு = வேகம், வீசுதல், ஊஞ்சலாட்டு, நீளம், மிகுதி.

வீச்சாய் நடக்கிறான், கைவீச்சுப் பெரிதாயிருக்கிறது, ஊஞ்சலை ஒருவீச்சு ஆட்டினான், வீடு வீச்சாயிருக்கிறது, வீச்சாய்க் கொடு என்பன, முறையே மேற்குறித்தபொருள்கட் கெடுத்துக்காட்டாம்.

வீச்சு - வீச்சம் = நாற்றம்.

காற்றானது நீண்டு செல்வதால், அதனொடு கலந்த வாசனையும் நீண்டு செல்கின்றதென்க. வீசுதல் என்னும் சொல் வழக்கில் தீய நாற்றத்தையே குறிக்கும்.

வீசு - வீசை = நீண்டு வளரும் மேலுதட்டு மயிர், தலைமயிரும் தாடியும் நீண்டுவளர்வனவே யாயினும், குறுக்காக நீண்டு வளர்வது மீசையொன்றே யாதலின், அது வீசையெனப்பட்டது.

வீசை - மீசை.

ஒருசில சொற்கட்குக் கற்றோர் வழங்கும் வடிவினும் கல்லார் வழங்கும்வடிவே முந்தினதாயுள்ளது.

(9) ஊக்குதல்

ஊக்குதல் ஊக்கமுண்டாக்குதல். ஊக்கமாவது முயற்சிக்கேது வான முனைப்பு. ஒருவன் தன் மனத்தாலேனும் பிறனாலேனும் ஒரு வினை செய்யத் தூண்டப்பட்ட விடத்தே, அவனிடத்து அதற்குரிய முயற்சி பிறக்கும். தூண்டுதல் என்பது முற்செலுத்துதல். ஒரு குதிரை முற்செல்லுமாறு அதனை ஊர்பவன் அதைத் தூண்டிவிடுவது போன்றதே, ஒருவன் ஒரு வினை செய்யுமாறு அவனது உள்ளம் அவனைத் தூண்டிவிடுவதும்.

உள் - உள்ளம் = ஊக்கம், உள்ளுதல் = ஊக்குதல்.