பக்கம் எண் :

81

மெட்டு - மெட்டி.

மெத்துதல் = மேலிடுதல், பள்ளத்தை நிரப்புதல், மிகுதல், வெல்லுதல்.

மெத்தை = மேல்நிலை, மேல்தளம். மெத்து - மச்சு.

மே = மேல், மேம்பாடு.

“மேதக மிகப்பொலிந்த”                                         (மதுரைக். 19)

மேதுதல் = பள்ளத்தை நிரப்புதல்.

மேதை = மேன்மை, மேலோன், அறிஞன். மேதாள்வி - மேதாவி.

மேய்தல் = விலங்கு மேலாகப் புல்லைத் தின்னுதல், கூரையின் மேல் இலை வைக்கோல் முதலியவற்றை இடுதல்.

மேய் - வேய். வேய்தல் = மேலணிதல், கூரை மேய்தல், தலையின்மேல் முடி சூடுதல், உடம்பின்மேல் ஏதேனும் அணிந்து ஆள் அடையாளம் மறைத்தல். இவற்றிற்கு மூலக் கருத்து மேலிடுதல் என்பதாம்.

வேய் - வேய்ந்தோன் - வேந்தன் = முடி சூடியவன். சேர சோழ பாண்டியர் மூவரும் முடியுடை யரசராதலால் வேந்தர் எனப்பட்டமை காண்க. கொன்றை வேய்ந்தோன் என்னும் பெயர் கொன்றைவேந்தன் என மருவியிருத்தலையுங் காண்க.

வேய் = ஒற்று. ஒற்றர் மாறுகோலம் பூண்டு பகைவர் மறைகளை அறிபவராதலால், ஒற்று வேய் எனப்பட்டது. உடம்பின்மேல் ஒன்றை அணிந்தல்லது கோலம் மாறுதல் இயலாது. வேய் - வேய்வு - வேவு = ஒற்று.

மேவுதல் = மேலிட்டுக் கொள்ளுதல், வேய்தல்.

மேல் - மேலை, மேலும், மேலாக, மேலிட்டு, மேலுக்கு, மேற்கொண்டு, மேற்பட்டு.

மேலாகு, மேலிடு, மேற்கொள், மேற்படு முதலிய வினைகள் மேல் என்னுஞ் சொல்லை முன்னொட்டாகக் கொண்டவை.

மேல் - மேலா - மேலாவு = மேலதிகாரிகள் (High Command).