பக்கம் எண் :

99


எ-டு:தடால், தடார்
குபீல், குபீர்
மொலோர், சளார்

iv. தட்டல் (தடை)

ஒரு பொருள் இன்னொரு பொருளை முட்டினவுடன், முன்னதன் முற்செலவு தடுக்கப்படுவதால், முட்டற்கருத்தில் தடைக்கருத்துக் தோன்றிற்று.

ஒட்டு-அட்டு-அட்டி = தடை.

அட்டு-அட்டம் = குறுக்கு.

குறுக்கு நிற்பது எதுவும் தடையாகும். முட்டப்படும் சுவர் முதலியவும் குறுக்கு நின்றுதான் தடுக்கும். ஆதலால், குறுக்கு நிற்றல் எனினும் தடுத்தல் எனினும் ஒன்றே.

அட்டங்கால் = குறுக்காக மடக்கி வைக்குங் கால்.

அட்டு - அட்டணம். அட்டணக்கால் (அட்டணங்கால்) = குறுக்காக மடக்கிவைக்குங் கால்.

அட்டப் பல்லக்கு = குறுக்காகக் காவும் பல்லக்கு.

அட்டம் பாரித்தல் = குறுக்காக (பக்கவாட்டில்) வளர்தல்.

குள் - குறு - குறுகு - குறுக்கு = வழியின் பக்கவாட்டு, வழித்தடை, முதுகின் குறுக்குப் பகுதி.

குள் - (குட்டு) - கட்டு. கட்டுதல் = தடுத்தல், வழியிற் குறுக்காகச் செல்லுதல்.

“காடை கட்டினால் பாடைகட்டும்” என்பது பழமொழி.

துள் - தள் - தட்டு. தட்டுதல் = தடுத்தல். நீருள் மூழ்கினவனுக்குத் தரை தட்டுதலும், முற்செல்பவனுக்குச் சுவர் தட்டுதலும் தடையாகும்.

தட்டு - தட்டி = அறையை அல்லது வழியைத் தடுக்கும் மூங்கிற்பாய் அல்லது தென்னங்கிடுகு.

தள் - தளை = தடுக்கும் கட்டு அல்லது விலங்கு, கட்டு அல்லது பிணிப்பு, செய்யுட்சீரின் ஓசைப் பிணிப்பு.

தளைதல் = தடுத்தல், பிணித்தல்.

தள் - தடு - தடை. தடு - தடுப்பு. தடு - தடுக்கு = சிறு தட்டி போன்ற பாய்.