பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பகு - பகிர் - பகிர்வு. பகு - பகர். பகர்தல் = பொருள்களைப் பகுத்து விலை கூறுதல்.

பகு - பாகு = பகுதி, பக்கம், பக்கமாயிருந்து பேணுபவன் (பாகன்).

பாகு - பாகன். பாகு - பாகம். பாகு - பாகை.

பாகு - பாக்கு = பகுதி, கூறு. பாக்கு - பாக்கியம் = கூறு, நற்கூறு, பேறு.

“அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்”                                 (பெரும்பாண். 132)

பால்வாய்க் குழவி என்னும் சிலப்பதிகாரத் தொடருக்கு (15:23), மேற் பெறக்கடவ நல்ல பகுதியைத் தன்னிடத்தே யுடைய குழவி என்று அடியார்க்குநல்லார் கூறுதல் காண்க.

பாக்கு என்னும் சொல்லை bhag என எடுத்தொலிப்பதனா லேயே அது வடசொற்போல் தோன்றுகின்றது. இயம் என்பது ஓர் ஈறு. ஒ. நோ. கண் - கண்ணியம், பண் - பண்ணியம்.

பாக்கு - பாக்கம் = பக்கம், பக்கமான இடம், பட்டினப்பகுதி. பாக்கம் - வாக்கம்.

பாக்கு - பாங்கு - பாங்கர். பாங்கு - பாங்கன்.

பகு - பா - பாத்தி. பா - பாது. பாதிடு - பாதீடு.

பகு - வகு - வகுதி. வகு - வகுப்பு.

வகு - வகை. வகு - வகுந்து = வகை, வகுத்த வழி. வழிவகுத்தல், வழிவகை என்பன மரபு.

வகு - வக்கு = வகை, வழி.

வகு - வகிர் - வகிடு = வகிர்ந்த உச்சி, உச்சிக்கோடு.

வகு - வாகு - வாக்கு = பக்கம், திசை.

இடக்கை வாக்கு, காற்றுவாக்கு முதலிய வழக்குகளைக் காண்க.

பகு என்னும் சொல் தென்சொல் என்பதற்குக் காரணங்கள்:

(1) வடமொழியில் பகு என்னுஞ் சொற்கு மூலமாகக் காட்டப்படும் bhaj என்பதற்கு ஆணிவேரேனும் வரலாறேனும் இல்லை.