iii. துளையுள்ள பொருள்கள் துளை ஊடுருவியதும் உருவாததும் என இருவகைப்படும். குழல் - குடல். குழை - குழாய். குடு - குடுவை. குடு - குடுக்கை. குடு - குடல் - குடலி - குடலை. குள் - கூள் - கூண்டு - கூடு. சுரை = உட்டுளையுள்ள காய். உட்டுளை முற்றிய சுரையின் குடுக்கையிலுள்ளது. தும்பு - தும்பி = உட்டுளையுள்ள உறிஞ்சியைக் கொண்ட ஈவகை, உட்டுளையுள்ள கையையுடைய யானை. தும்பு - தூம்பு = நீர்க்குழாய். தூம்பு - தூம்பா. தும்பு - தொம்பை = குந்தாணி, பறை. நுல் - (நல்) - நல்லி = மூளை எலும்பு. நுள் - நூழில் = துளையுள்ள செக்கு. நூழிலாட்டு = மிகுந்த எள்ளைச் செக்கிலாட்டுவது போல் ஏராளமான பேரைக் கொல்லுதல், அதைக் கூறும் புறத்துறை. நுள் - (நூள்) - நாள் - நாளம் = உட்டுளையுள்ள தண்டு. அரத்தக் குழாய், அதுபோன்ற நரம்பு. நாள் - நாளி = உட்டுளையுள்ள மூங்கில், மூங்கிற்படி. நாளி - நாழி = படி. நாழி - நாழிகை = நாழிகை வட்டில், நாழிகை நேரம், அறை. உண்ணாழிகை =கருவறை (கருப்பக் கிருகம்). நாளி - நாடி = அரத்தக் குழாய், அதுபோன்ற நரம்பு. நாடி - நாடா = நரம்புபோல் நீண்ட பட்டி. நாளம் - (நளம்) - நரம் - நரம்பு. நரம் - நார் = நரம்புபோன்ற மரஇழை. நாள் - நாண் - நாணல் = உட்டுளையுள்ள தட்டை. புல் = உட்டுளையுள்ள பயிர்வகை. “புறக்கா ழனவே புல்லென மொழிப” (தொல். மரபு. 86) புள் - (புழு) - புழல் - புழலை - புடலை. |