பக்கம் எண் :

143

அறியார். அது குற்றமன்று. ஆயின், ஓர் ஆசிரியன் ஒரு சொல்லை ஒரு பொருளில் ஆண்டவிடத்து, அதுவே அதற்குப் பொருளென வலிப்பதே குற்றமாம்.

எ-டு.

தூங்குதல் = தொங்குதல், தொங்கும் ஏணை தொட்டில் மஞ்சம் முதலியவற்றில் கண்வளர்தல், கண்வளர்தல், சோம்புதல், காலந் தாழ்த்தல், நீட்டித்துச் செய்தல்.

ஊக்கமில்லாது சோர்வடைந்திருப்பவனை, உறங்கிப்போயிருக்கிறான் அல்லது தூங்கிப்போயிருக்கிறான் என்பர். இஃதோர் அணிவகையான வழக்காம்.

“தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு ”                                               (383)

என்னுங் குறளில் காலந்தாழ்த்தற் பொருளிலும்,

“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை”                                               (672)

என்னுங் குறளில் நீட்டித்துச் செய்தற் பொருளிலும், தூங்கற் சொல் வந்துள்ளது. இதன் அணியியன்மையை அறியாதார், திருக் குறளின் பழைமைபற்றி அந் நூற்பொருளே முந்தியதென மயங்குவர்.

சிலர், ஊகாரச் சுட்டுப்படலத்திற் காட்டப்பட்டுள்ள சொற் களெல்லாம் முன்மைச்சுட்டு வழிப்பட்டவாயின், ஏன் அவை அக் கருத்தை உணர்த்தவில்லையென வினவலாம். அவையெல்லாம் முன்மைச்சுட்டு வழிப்பட்ட வாயினும், வெவ்வேறு கருத்திற்குத் தாண்டி அவ் வேறுபட்ட கருத்துகளையே முதன்மையாய் உணர்த்து வதால், அவற்றில் முன்மைச்சுட்டுக் கருத்து முனைந்து தோன்று வதில்லை. இன் (இன்னொரு), இன்னும், இனி, இத்துணைப் போல (இத்தினிப்போல) முதலிய சொற்றொடர்கள் அண்மைச் சுட்டையே அடிப்படையாகக் கொண்டிருப்பினும், அச்சுட்டு அவற்றில் விழிப்பத் தோன்றுகின்றிலது. கடலன்ன செல்வர் என்பதில், அன்ன என்னும் சொல் சேய்மைச் சுட்டடியைத் தாங்கி நிற்பினும், அச் சுட்டுப்பொருள் அதில் வெளிப்பட்டுத் தோன்றுவதில்லை. இங்ஙனம் சுட்டுச் சொற்களிலேயே சுட்டுப்பொருள் கரந்து நிற்கு மாயின்,