முறைத்தல் = சினந்து நோக்கல். முல் - முன் - முனிதல் = கோபித்தல், வெறுத்தல். முனிவு = கோபம், வெறுப்பு. முனி = உலகை வெறுத்தவன். முனிவு - முனிவன். முன் - முனை. முனைதல் = கோபித்தல், வெறுத்தல். முனைவு = கோபம், வெறுப்பு. முனைவன் = முனிவன். முள் - முர - முரள் - முரண் - முரண்டு = பிடிவாதம். முரணுதல் = மாறுபடுதல். முரண்டு = மாறுபாடு, எதிர்ப்பு, அடங்காமை. முள் - (முண்) - முணவு. முணவுதல் = வெறுத்தல், சினத்தல். முண - முணை - முணைதல் = வெறுத்தல். மேலோர்க்கு அடங்காது முரண்டுபண்ணுவதைத் தில்லுமுல்லு அல்லது திண்டுமுண்டு என்று கூறுவது வழக்கம். (11) திரளல் துறை ஒன்றாகச் சேரக்கூடிய பல அணுக்கள் அல்லது பகுதிகள் சேரின், திரட்சியுண்டாகும். i. திரட்சி திரண்ட பொருள்கள் திரட்சிபற்றிய சொற்களால் குறிக்கப் பெறும். உவ - உவா - உவவு = முழுமதி. உல் - உலம் = திரட்சி, திரண்ட கல். உலக்கை = திரண்ட தடி. குள் - குழு - குழவி = அம்மிக்குழவி. குழுவுதல் = திரளுதல். குழு - குழை = குண்டலம். குழு - கொழு - கொழுக்கட்டை. குழு - கழு - கழுகு = திரண்ட பறவை. குள் - குண் - கண் - கணை = திரட்சி. கணை - கணையம் = எழுமரம். குண் - குண்டு - குண்டலம். குண்டு - கண்டு = கட்டி. கற்கண்டு நூற்கண்டு முதலியவற்றை நோக்குக. குண்டு - குண்டன். |