(2) குவிதல் துறை i. குவிதல் மலர்ந்த பூவின் இதழ்கள் கூடும்போது முகைபோற் குவிதலால், கூடுதற் கருத்திற் குவிதற் கருத்துப் பிறந்தது. கும் - குமிழ் - குமிழி. கும் - குமு - குமுதம் = பகலிற் குவியும் ஆம்பல். கும் - குமி - குவி. குவிதல் = கூம்புதல். குவி - குவம் = ஆம்பல். கும்பு - கூம்பு. கூம்புதல் = குவிதல். கும்பு - குப்பு - குப்பி = குவிந்த சிறுகலம். கூலங்களையும் காய்கறிகளையும் கல் மண் முதலியவற்றையும் கூம்பிய வடிவில் தொகுத்து வைத்தல் குமித்தல் அல்லது குவித்தல் எனப்படும். கும் - குமி - குவி. கும் - கும்மல். கும் - கும்பு - குப்பு - குப்பல். குப்பு - குப்பை = குவியல். குமி - குமியல். குவி - குவியல், குவால், குவை. சும் - சும்பு - சூம்பு - சூம்பல் = சூம்பிச் சொத்தையான காய்கனி. சூம்பினகை = கூம்பி மொண்டியான கை. ii. கைகுவித்தல் கும்மியடித்தற்கும் கும்பிடுவதற்கும் இருகையையும் ஒன்று சேர்க்கும்போது அவை கூம்பிய வடிவத்தை அடையும். கும் - கும்மி = கை குவித்தடிக்கும் விளையாட்டு. கும்மி - கொம்மி. கும் - கும்பு - குப்பு - குப்பி - கொப்பி = கும்மி. கும் - கும்மை - கொம்மை. கொம்மை கொட்டுதல் = கை குவித் தடித்தல். கும் - கும்பு - கும்பிடு. கும்பிடுதல் = கைகுவித்துத் தொழுதல். கும்பு - கூம்பு - கூப்பு. கைகூப்புதல் = கைகுவித்தல். துள் - தொழு. தொழுதல் = கை கலத்தல் அல்லது கூட்டுதல். |