குள் - குறு - (கறு) - கற - கறங்கு = காற்றாடி. கறங்குதல் = சுற்றுதல், சுழலுதல். குறு - கிறு - கிறுகிறு = கிறுகிறுப்பு = தலைச்சுற்று.. சுற்றும் பொருளை நோக்கிக் கிறுகிறுவென்று சுற்றுகிறது என்பதையும், ‘கிறுகிறு வாணம் கின்னறு வாணம்’ என்று சொல்லிக் கொண்டு சிறுவர் சுற்றியாடி விளையாடுவதையும், தலை வலிக்கும் போது கிறுகிறு வென்று வருகிறது என்று சொல்வதையும் நோக்குக. கிறு - கிறுக்கு = தலைச்சுற்று, மூளைக்கோளாறு, பைத்தியம். ஒருவர் நீண்டநேரம் சுற்றியாடுவதால் தலைமயக்கம் உண்டாதல் காண்க. கிறுகிறுத்தல் = தலைசுற்றுதல், மயக்கமாதல். “தலைசுழன்று கிறுகிறுத்து” (பிரபோத. 18:54) கிறு - கிறங்கு - கிறக்கம் = மயக்கம். கிறங்குதல் = மயங்குதல். குள் - கொள் - கொட்பு = சுழற்சி. கொள் - கோள் = கதிரவனைச் சுற்றும் விண்மீன். “வளிவலங் கொட்கு மாத்திரம்” (மணிமே. 12:91) சுள் - சுழல் - சுழற்சி - சுழல் - சுழற்று - சுழற்றி - சுழட்டி. சுரித்தல் = சுழலுதல். “சுரிக்கு மண்டலந் தூங்குநீர்ச் சுரிப்புற வீஙக்” (கம்பரா. இராவணன் தேரேறு. 30) சுள் - சுறு - சூறை = சுழித்தடிக்குங் காற்று. சூர்த்தல் = சுழலுதல். சூர்ப்பு = சுழற்சி. துள் - (திள்) - திரி. திரிதல் = சுழலுதல். சூறைவளி = சூறாவளி. “வலந்திரியாப் பொங்க” (பு. வெ. 9:12) திரித்தல் = சுழற்றுதல். “எஃகுவலந் திரிப்ப” (திருமுருகு. 111) திரி - திரிகை = திரிகல். திரி - தெரு - தெரும் = சுழற்சி. தெரும்வா - தெருமா - தெரு மரல். |