ஒரு பொருளை வினைமுதல் (கருத்தா) துளைப்பினும், வினை முதலாற் கையாளப் பெறும் கருவி துளைப்பினும், சொல்லாக்க நெறிக்கு இரண்டும் ஒன்றே. வலிதாய்த் தொடும் பொருள்களுள், கூர்நுனி யுள்ளவை சற்று உள்ளிறங்கு மாதலால், அதனையே துளைத்தலின் துவக்க நிலையாகக் கொள்ளல் வேண்டும். கடினமான பொருளைத் துளைப்பன வெல்லாம் கூர்நுனி யுள்ளனவாகவே இருக்கும். (1) குழித்தல் துறை குழித்தலாவது பள்ளம் உண்டுபண்ணுதல். i. குத்தல் குத்தல் என்பது ஒன்றன் உள்ளிறங்குமாறு கூர்ப்பொருளாற் குத்துதல். குத்து - குத்தி - கத்தி. தொடுதலியலிற் கூறிய குத்தல் குத்தித் தொடுதல் என்றும், இங்குக் கூறியது குத்தித் துளைத்தல் என்றும், வேறுபாடறிக. (உர்) - அர் - அர - அரங்கு. அரங்குதல் = அம்பு முதலியன தைத்தல். குத்து - குத்தி = குத்துங் கருவி, கொழுவொடு சேர்ந்த கலப்பைப் பகுதி. குத்து - கொத்து - கொட்டு. களைக்கொத்து களைக்கொட்டு முதலிய பெயர்களை நோக்குக. (துள்) - (தள்) - (தய்) - தை. முள் தைத்தல் = முள் உள்ளிறங்குதல். புள் - பொள் - பொளி. பொளிதல் = உளியாற் கொத்துதல். பொள் - பொ. பொத்தல் = குத்தித் துளைத்தல். பொள் - பொது. பொதுத்தல் = முள் முதலியன பாய்தல். பொது - பொதிர். பொதிர்த்தல் = குத்துதல். ii. கீறுதல் கீறுதலாவது கூர்ங்கருவியாற் குத்தி நீள இழுத்தல். குள் - கிள் - கீள். கீள்தல் = கிழித்தல். பிளத்தல். கிள் - கிழி. கீள் - கீழ். கீழ்தல் = கிழித்தல், பிளத்தல். |