பக்கம் எண் :

10

சொற்குடும்பமும் குலமும்

மக்களைப் போன்றே, சொற்களும் குடும்பங் குடும்பமாகவும் கூட்டங் கூட்டமாகவும் இயங்குகின்றன. குடும்பத்தினின்று குடும்பும், குடும்பினின்று குடியும், குடியினின்று குலமும் குலத்தினின்று இனமும், இனத்தினின்று வரணமும், மக்கள் மரபில் கிளைத்துப் பெருகுவதுபோலச் சொன்மரபிலும் கிளைத்துப் பெருகுகின்றன.

சொன்மரபை விளக்குதற்கு, ஈங்கொரு குடும்பமும் அதன் வழிப்பட்ட குலமுங் காட்டப்பெறும்.

‘உல்’ என்பது வளைவைக் குறிக்கும் ஒரு வேர்ச்சொல்.

உல் - உலவு. உலவுதல் = வளைதல், சுற்றுதல், திரிதல். உல் - உலா. உலா = சுற்றித் திரிதல், அரசன் நகரை வலமாகச் சுற்றுதல், அதைப் பாடிய பனுவல்.

உலவு - உலாவு, உலா = உலாத்து.

உல் - உல. உலத்தல் = வளைதல், உருளுதல், சுழல்தல்.

உல - உலம் = வளைவு, உருட்சி, திரட்சி, சுழற்சி.

உலம் + வா = உலமா. உலம்வரு - உலமரு.

உலமருதல் = சுழலுதல். உலமா - அலமா.

உலம் - உலக்கை = உருண்டு திரண்ட தடி.

உலவு - உலகு - உலகம் = உருண்டையா யிருப்பது.

உல் - உர் - உரவு = உலவு.

உர் - உருள் - உருளி, உருளை, உருண்டை.

உருள் - உருட்டு. உருண்டை - உண்டை.