முதலாவது இருவகை நூலையும் நோக்கின், அவற்றுக்குப் பொதுவான நுண்மை, நீட்சி, நேர்மை என்னும்மூவியல்புகள் புலனாகும். பஞ்சினால் நெயவு நூலிழைப்பதுபோலச் சொல்லால் அறிவு நூலிழைத்தல், அல்லதுசிலந்தி பட்டுப்பூச்சி முதலியவற்றின் உடம்பினின்று வெளிவரும் நெயவு நூலைப்போலப் புலவனின் உள்ளத்தினின்றுஅறிவுநூல் வெளிப்படுதல், மற்றுமொரு பொதுத் தன்மையாகும். இரண்டாவது இருவகைப் பாவையும் நோக்கின், அவற்றிற்குப் பொதுவான நீட்சி, பரப்பு, இசைப்பு ஆகிய மூவியல்புகள் புலனாகும். 7. கருமநிலை ஒரு வினைத்தொடக்கத்தை அரும்பு நிலைக்கும் அதன் விரிவை அலர்நிலைக்கும் ஒப்பிட்டுக் கூறுவது வழக்கம். இரு காதலரின் களவொழுக்கத்தை ஓரிருவர் அறிந்து மறைவாய்ப் பேசுவதை அம்பல் என்றும், பலர் அறிந்து வெளிப்படையாய்ப் பேசுவதை அலர் என்றும் அகப்பொரு ளிலக்கணம் கூறும். அம்பல் - அரும்பு. அலர் - விரிந்த மலர். 8. வறுமை வறுமையால் வருந்தும் மாந்தர் நொய்ய வுடம்புடன் வள்ளலாரை நாடி அங்குமிங்கும் அலைந்து திரிதல், ஆலிலையும் இலவம்பஞ்சும் ஆடிக்காற்றில் அங்குமிங்கும் பறந்து திரிவதை யொக்கும். இதனால், ஆலாய்ப் பறத்தல், பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்குகள் எழுந்தன. எளிமையைக் குறிக்கும் பஞ்சை என்னும் சொல்லும், வற்கடத்தைக் குறிக்கும் பஞ்சம் என்னும் சொல்லும், பஞ்சாய்ப் பறத்தல் என்னும் வழக்கினின் றெழுந்தவை யாகும். “ மூவேந்தரும் அற்றுச் சங்கமும் போய்ப்பதின் மூன்றோடெட்டுக் கோவேந்த ரும்அற்று மற்றொரு வேந்தன் கொடையும்அற்றுப் பாவேந்தர் காற்றில் இலவம் பஞ்சாகப் பறக்கையிலே தேவேந்த்ர தாருஒத் தாய்ரகு நாத சயதுங்கனே!’’ என்ற படிக்காசுப்புலவர் பாட்டை நோக்குக. |