அம்மைவடு 325

      தெரிந்தன. முந்தின வருஷத்தில் நான் திருவாவடுதுறையிலே கண்ட
காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக என் ஞாபகத்துக்கு வந்தன. என் ஆசிரியர்
பலருக்குச் செய்யுள் இயற்றி அளித்ததை நினைத்த போது, “இவ்வருஷமும்
அத்தகைய ஆச்சரிய நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!”
என்று வருந்தினேன்.

      “நாம் இல்லாத காலத்தில் மாணக்கர்களுக்கு என்ன என்ன பாடங்கள்
நடந்தனவோ! நாம் என்ன என்ன அரிய விஷயங்களைக் கேளாமல்
இருக்கிறோமோ!” என்ற சிந்தனையும் எனக்கு இருந்தது. பிள்ளைவர்கள்
மார்கழி மாதத்தில் புறப்பட்டுச் சில ஊர்களுக்குச் சென்று தை மாதம்
குருபூஜைக்கு வந்தார்கள் என்ற செய்தி எனக்குப் பிறகு தெரிய வந்தது.
அப்பொழுதுதான், “நமக்கு அதிகமான நஷ்டம் நேரவில்லை” என்று எண்ணி
ஆறுதல் உற்றேன். பிள்ளையவர்கள் விருப்பப்படி அடிக்கடி
திருவாவடுதுறையிலிருந்து சிலர் வந்து என்னைப் பார்த்துச் செல்வார்கள்.

மகாமகம்

      அந்த வருஷம் (1873) மகாமக வருஷம். மகாமக காலத்தில்
கும்பகோணத்திற் பெருங்கூட்டம் கூடுமென்றும் பல வித்வத்சபைகள்
நடைபெறும் என்றும் கேள்வியுற்றிருந்தேன். ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் தம்
பரிவாரங்களுடன் சென்று தங்குவாரென்றும், பல வித்துவான்கள் அவர் முன்
கூடுவார்களென்றும், பிள்ளையவர்களும் அவருடன் போய்த் தங்குவாரென்றும்
அறிந்தேன். “நம்முடைய துரதிர்ஷ்டம் எவ்வளவு கொடியது! பன்னிரண்டு
வருஷங்களுக்கு ஒருமுறை வரும் இவ்விசேஷத்துக்குப் போய் வர நமக்கு
முடியவில்லையே! பிள்ளையவர்களைச் சார்ந்தும் அவர்களோடு சேர்ந்து
இப்புண்ணிய காலத்தில் நடக்கும் விசேஷங்களைக் கண்டு களிக்க முடியாமல்
அசௌக்கியம் நேர்ந்து விட்டதே!” என்றெல்லாம் நினைந்து நினைந்து
வாடினேன்.

      சூரிய மூலையிலிருந்து சிலர் மகா மகத்துக்குப் போய் வந்தனர். அங்கே
சுப்பிரமணிய தேசிகரும் பிள்ளையவர்களும் வந்திருந்தார்களென்றும் பல பல
விசேஷங்கள் நடைபெற்றனவென்றும் அவர்கள் வந்து சொல்ல எனக்கும்
இயல்பாகவே இருந்த வருத்தம் பின்னும் அதிகமாயிற்று.

ஆசிரியரை அடைதல்

      என் தேக நிலை வர வரக் குணமடைந்து வந்தமையால், “இனி
விரைவில் பிள்ளையவர்களிடம் போக வேண்டும்” என்று அடிக்கடி
சொல்லிக்கொண்டே இருந்தேன். என் தந்தையார் என் வேகத்தை