758என் சரித்திரம்

      நீதிகளைக் கூறும் செய்யுட்களைத் திரட்டி வகுத்து ஒரு நூல்
வெளியிடலாமென்று எண்ணியிருக்கிறேன். இதை ஒரு முறை பார்த்தால்
எனக்கு உபயோகமாக இருக்கும்” என்றார். அந்தச் சுவடியைச் சில
மாதங்களுக்குப் பிறகு அவர் கும்பகோணத்துக்கு மகாமகத்துக்காக வந்த சமயம்
பெற்றுக் கொண்டார்.

உத்தம சம்பாவனை

      1897-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் மகாமகம் நடந்தது. அப்போது
கும்பகோணத்திற் கூடிய கூட்டம் கணக்கில் அடங்காது. திருவாவடுதுறை
ஆதீனகர்த்தராக விளங்கிய அம்பலவாண தேசிகர் தம்முடைய
பரிவாரங்களுடன் கும்பகோணம் பேட்டைத் தெருவிலுள்ள மடத்தில் விஜயம்
செய்திருந்தார். பல தேசங்களிலிருந்தும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து
கூடினர்.

      அப்போது தினந்தோறும் அம்பலவாண தேசிகருடைய முன்னிலையில்
வித்துவான்களுடைய உபந்நியாசங்களும் சல்லாபங்களும் நடைபெற்றன. ஒரு
நாள் மிகச்சிறந்த வித்துவான்களைப் பூசித்து உத்தம சம்பாவனை செய்வதாக
ஏற்பாடாகியிருந்தது. அம்பலவாண தேசிகர் ஆறு ஆசனங்களைப் போடச்
சொல்லிப் பிரசித்தமான ஸம்ஸ்கிருத வித்துவான்கள் ஐவரை ஐந்து ஆசனங்
களில் அமரச் செய்தார். அவர்கள் அமர்ந்த பிறகு என்னை நோக்கி “அந்த
ஆசனத்தில் இருக்க வேண்டும்” என்று ஆறாவது ஆசனத்தைக் காட்டினார்.
எனக்குத் துணுக்கென்றது. வாழ்நாள் முழுவதும் சாஸ்திரப் பயிற்சியிலே
ஈடுபட்டு எழுத்தெண்ணிப் படித்துத் தாம் கற்ற வித்தைக்கே ஒளியை
உண்டாக்கிய அந்தப் பெரியவர்கள் எங்கே! நான் எங்கே? நான்
யோசனைசெய்து நிற்பதை அறிந்த தேசிகர், “என்ன யோசிக்கிறீர்கள்?
அப்படியே இருக்க வேண்டும்” என்றார். “இவர்களுக்குச் சமானமாக இருக்க
எனக்குத் தகுதி இல்லையே” என்றேன். தேசிகர், “தகுதி உண்டென்பதை இந்த
உலகம் அறியும். இவர்களைப் போன்ற மகா வித்துவான்கள் இந்த நாட்டில்
தேடிப்பார்த்தால் ஒருவேளை கிடைத்தாலும் கிடைப்பார்கள். தங்களைப் போல
ஒருவர் அகப்படுவது அரிது” என்று அன்பொழுகக் கூறி வற்புறுத்தவே அந்த
மகா மேதாவிகளுடைய வரிசையிலே பணிவோடு அமர்ந்தேன். இரட்டைச்
சால்வையும் சம்மானமும் பெற்றேன். மணிமேகலையில் மேற்கொண்ட
உழைப்பே அந்தப் பெருமைக்குக் காரணமென்று நான் எண்ணி இறைவன்
திருவருளை வாழ்த்தினேன்.