பக்கம் எண் :

பக்கம் எண் :15

2.       வடக்கிருத்தல்

     வடக்கிருத்தல் அல்லது ஸல்லேகனை என்பது சமண சமயக் கொள்கை. உண்ணா நோன்பிருந்து உயிர்விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பதை அருங்கலச் செப்பு என்னும் சமண சமய நூல் இவ்வாறு கூறுகிறது.

    இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால்
    கடைதுறத்தல் சல்லே கனை.

     அஃதாவது, பொறுக்க முடியாத மனவேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. இரத்தின கரண்டக சிராவகாசாசரம் என்னும் வடமொழிச் சமணசமய நூலிலே இதே செய்தி கூறப்படுவதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

     சல்லேகனை செய்வோர் தருப்பைப் புல்லின்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவுகொள்ளாமல் இருக்க வேண்டும். வேண்டுமானால் நீர்மட்டும் உட்கொள்ளலாம். சல்லேகனை இருக்கும்போது எதையும் மனத்தில் நினைக்காமலும் விரும்பாமலும் தூய மனதோடு தீர்த்தங்கரர் அல்லது அருகரைத் தியானித்துக்கொண்டிருக்க வேண்டும். அடுத்த பிறவியில் அரசனாகவே அல்லது பெருஞ் செல்வனாகவோ அல்லது தேவலோகத்திலே தெய்வப் பிறவியாகவோ பிறக்க வேண்டும் என்று விரும்புவது கூடாது. அன்றியும், சல்லேகனையால் உடம்புக்கு வருத்தம் உண்டாகும்போது விரைவில் உயிர் நீங்க வேண்டும் என்று கருதவும் கூடாது. இவ்வாறு தூய எண்ணத் தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு சல்லேகனை இருக்கவேண்டும்.

     சல்லேகனை செய்வது தற்கொலை செய்வதற்கொப்பாகும் என்று பௌத்தக் காவியமாகிய குண்டலகேசி கூறுகிறது. இது தற்கொலையாகாது என்று விடையிறுக்கிறது நீலகேசி என்னும் சமணசமய நூல். நீலகேசி கூறுவது வருமாறு:

     ‘அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலாம்
    ஒழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ
     வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேல்
    பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ?241

     இதற்கு உரை எழுதிய சமணதிவாகர வாமனமுனிவர், இவ்வாறு விளக்கங் கூறுகிறார்:

     ‘‘சல்லேகனையாவது - மரண காலத்துச் சாகின்றோமென்று சங்கிலேசம் (வருத்தம்) சரீராதியில் சங்கமெல்லா மொழியல் வேண்டுமென்று சொல்லித் சித்த சமாதானம் பண்ணுவித்துக் கலக்க நீக்கி, பரலோக சமண பாதேய (கட்டமுது) மாகிய பஞ்ச நமஸ்கார பரம மந்திரோபதேசம் பண்ணி ரத்தினத் திரய ரூபமாகிய சன்மார்க்கங் கலங்காமை, தர்மோபதேசனாதிகளாற் கட்டுதல்.

    ‘‘எல்லாப் படியும் விலக்கப் படாது, எரியால்
   இல்லம் அழியில் அதனகத்தில் - நல்ல
    பொருள்கொண்டு போவான்போற் சாம்போது பற்றற்று
    அருள்கொண்டு போத லறம்.

என்பவற்றானும் சல்லேகனையாமாறறிந்து சொல்லிக் கொள்க.’’

     பத்திரபாகு முதலான சமணசமயப் பெரியார்கள் பலர் சல்லேகனையிருந்து உயிர் நீத்த செய்தி மைசூர் நாட்டில் சிரவண பௌகொள என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டுச் சாசனங்களினால் தெரிகிறது. சமணசமயத் துறவியாராகிய கவுந்தி அடிகள் என்னும் மூதாட்டியார் சல்லேகனை என்னும் உண்ணா நோன்பிருந்து உயிர்விட்ட செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. கோவலன் கொலையுண்டதும், பாண்டியனும் கோப்பெருந் தேவியும் உயிர்நீத்ததும், அரண்மனை எரியுண்டதும், மாதரி என்னும் மூதாட்டி அடைக்கலமிழந்த துயரந் தாங்காமல் தீயில் பாய்ந்து உயிர்விட்டது ஆகிய துயரச் செய்திகளை யெல்லாம் கவுந்தியடிகள் அறிகிறார். அறிந்து ஆற்றொணாத் துயர் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர்புண்டென்று கருதுகிறார். மாசற்ற தூய மனம் படைத்த அம் மூதாட்டியாருக்குத் தீராத் துயரம் உண்டாகிறது. ஆகவே, சமணசமயக் கொள்கைப்படி உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறார். இதனை,

    ‘‘தவந்தருபு சிறப்பிற் கவுந்தி சீற்ற
    நிவந்தோங்கு செங்கோ னீணில வேந்தன்
    போகுயிர் தாங்கப் பொறைசா லாட்டி
    என்னோ டிவர்வினை யுறுத்த தோவென
    உண்ணா நோன்பொ டுயர்பதிப் பெயர்ந்ததும்.’’

என்று சிலப்பதிகாரம் (நீர்ப்படைக் காதை) கூறுகிறது.

     சல்லேகனை என்பது தமிழில் வடக்கிருத்தல் என்று கூறப்பட்டது. வடக்கிருத்தல் என்னும் பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை ஆராய்வோம். சமணர் சல்லேகனை இருக்கும்போது வடக்கு நோக்கி அமர்வது வழக்கம். வடக்குப் புண்ணியத் திசை என்பது அவர்கள் கொள்கை. ஏனென்றால் சமணசமயப் பெரியார்களாகிய  தீர்த்தங்கரர்கள் யாவரும்வடக்கே வீடுபேறடைந்தனர்.முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனப்படும் ரிஷபர் கயிலாயமலையில் வீடுபேறடைந்தார். நேமிநாதர் என்னும் தீர்த்தங்கரர் வட இந்தியாவில் கிர்நார் என்னும் நகரில் வீடுபேறடைந்தார். மற்ற எல்லாத் தீர்த்தங்கரர்களும் வட இந்தியாவில் வீடுபேறடைந்தார். ஆகவே, வடக்குத் திசையைப் புண்ணியத் திசையாகக் கொண்டு வடக்கு நோக்கியிருந்து சல்லேகனை செய்தனர். ஆகவே, வடக்கு அமர்ந்து நோற்கப்படுவதனால், சல்லேகனைக்கு வடக்கிருத்தல் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

     சங்ககாலத்தில் இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் பரவியிருந்தது. சமண சமயத்தவர் மட்டுமின்றி, அச் சமயத்தவர் அல்லாதவர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தி சங்க நூல்களில் கூறப்படுகிறது.

     சேரமான் பெருஞ்சேரலாதனும் சோழன் கரிகாற் பெரு வளத்தானும் வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் போர் செய்தனர். அப்போரில் சேரமான் பெருஞ் சேரலாதன் முதுகில் புறப்புண் ஏற்பட்டது. புறப்புண் என்பது முதுகுப்புறத்தில் புண்படுதல். வீரர்கள், போரிடும்போது தமது மார்பில் புண்பட்டால் அதைப் பெருமையாகக் கருதுவார்கள். முதுகில் புண்பட்டால் அதை அவமானமாகக் கருதுவார்கள். தற்செயலாகப் போரிலே புறப்பண் ஏற்பட்டது பெருஞ்சேரலாதனுக்கு. அதனால் பெருங்கவலை யடைந்தான்; தீராத்துயரம் ஏற்பட்டது. ஆகவே, அவன் உண்ணா விரதம் இருந்து (வடக்கிருந்து) உயிர்விட்டான். இச்செய்தியைப் புறநானூறு 65,66 ஆம் செய்யுள்களாலும் அவற்றின் உரையாலும் அறியலாம்.

     உறையூரை அரசாண்ட கோப்பெருஞ்சோழன், தன் மக்கள்  அரசுரிமைக்காகக் கலகஞ்செய்ததைக் கண்டு சினங்கொண்டு அவர்கள்மேல் போர் செய்யச் சென்றான். அப்போது, புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர், அறிவில்லாத மக்கள்மேல் தந்தை போர்செய்வது தவறு என்று கூறித் தடுத்துவிட்டார். ஆனால், சோழன் தன் மக்களின் செயலுக்காக வருந்தி வடக்கிருந்து (உண்ணாவிரதம் இருந்து) உயிர்விட்டான். சோழனுடைய நண்பர் பிசிர் ஆந்தையார் என்னும் புலவர் தம் நண்பராகிய சோழன் உயிர்விடுவதைக் கண்டு மனம் பொறாமல் தாமும் அவர் பக்கத்தில் அமர்ந்து வடக்கிருந்து உயிர்விட்டார். சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் இச்செய்தியறிந்து மனம் வருந்தித் தாமும் வடக்கிருந்து உயிர்விட்டார். இச்செய்திகளைப் புறநானூறு 212 முதல் 223 வரையில் உள்ள செய்யுள்களால் அறியலாம்.

     சிறுபஞ்சமூலம் என்னும் நூலிலேயும் வடக்கிருத்தல் கூறப்படுகிறது.

    வலியழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயின்

    நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார் - மெலிவொழிய
    இன்னவரால் என்னாராய் தந்த ஒருதுற்று
    மன்னவராச் செய்யும் மதித்து.

     இச்செய்யுள், இன்னின்னாருக்கு உணவுகொடுத்தவர் மறுபிறப்பில் மன்னராகப் பிறப்பார்கள் என்று கூறுகிறது. இதில் வடக்கிருத்தல் கூறப்படுவது காண்க. பழைய உரைக் குறிப்பு, ‘‘வடக்கிருந்தார் - பழிபட்டு உண்ணாது வடக்கிருந்தார்’’ என்று கூறுகிறது.

     சங்கப் புலவராகிய கபிலர் என்பவரும் தமது நண்பராகிய பாரிவள்ளல் இறந்த பிறகு பட்டினிகிடந்து (வடக்கிருந்து) உயிர்விட்டார் என்று அறிகிறோம்.

     இதனால், சங்ககாலத்திலே சல்லேகனை என்னும் வடக்கிருத்தல் சமணர்களிடத்தில் மட்டும் அல்லாமல் மற்றவர் இடத்திலும் பரவியிருந்ததை அறிகிறோம். இதனால் கடைச்சங்ககாலத்திலேயே சமணர் செல்வாக்குச் சிறந்திருந்தது என்பது அறியப்படுகிறது.

______________________________________________________________________________

      241. மொக்கலவாதச் சருக்கம், 55ஆம் செய்யுள்.