பக்கம் எண் :

பக்கம் எண் :4

2.சமணசமய தத்துவம்

    இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்;

    ‘உயிரும்உயி ரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும்
    செயிர்தீர்செறிப் பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற
    துயர்தீர்க்கும் தூய நெறியும்சுருக் காய்யுரைப்பன்;
    மயல்தீர்ந்த காட்சி யுடையோய்! இது கேண்மதித்தே’

என்பது மேருமந்தரபுராணம்.

    சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவற்றை நவபதார்த்தம் என்பர். இவை; உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம், ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோட்சம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.

     1. உயிர் (ஜீவன்); உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதியாகவுள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்க வில்லை. நல்வினை தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்3.

     உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து நிற்கும். குடத்திற்குள் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளிகாட்டும்; பெரிய அறையில் வைத்த விளக்கு அறை முழுவதும் ஒளிகாட்டும்; அதுபோல, உடம்புகளின் அளவுக்குத் தக்கபடி உயிரானது பெரியதாகப் பரவியும் சிறியதாகச் சுருங்கியும் இருக்கும். ‘‘பெரியதன் ஆவி பெரிது’’ என்பது ஆருகதர் வழங்கும் பழமொழி.

     மேலும், உயிர்கள் வீட்டது, மாற்றது என இருவகைப்படும். வீட்டது எனப்படும் ‘மோக்ஷ ஜீவன்’ அறிவு விளங்கப்பெற்று இருவினைகளையும் நீக்கி வீடுபேறடையும் தன்மையுள்ளது. மாற்றது எனப்படும் ‘சம்சார ஜீவன்’ நல்வினை தீவினைகளிற் கட்டுண்டு அவ்வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நரகத்திலும் சொர்க்கத்திலும் பிறப்பதும் இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நரகர், தேவர் என்னும் பிறப்புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவிகளிலே வீடுபேறடையா. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடுபெறும் வாய்ப்பு உடையன. அதுவும் துறவு பூண்டவர்களுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தார்க்கு வீடுபேறு கிடையாது.

     2. உயிரல்லது (அஜீவன்); புத்கலம், தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் இவை ஐந்தும் உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம். இவைகளும் உயிரைப் போன்றே அனாதியாக உள்ளன. அதாவது, இவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிர்களின் இயல்பாகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளைச் செய்து அவ்வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைத் துய்த்துப் பல பிறவிகளிலும் பிறந்து இறந்து உழல்வதும் பின்னர், நல்லறிவும் நன்ஞானமும் பெற்று இருவினைக் கட்டறுத்து வீடுபேறடைவதும் ஆகிய இத்தன்மைகள் உயிரல்லன வாகிய இந்த அஜீவப் பொருள்களுக்குக் கிடையா. இந்த ஐந்து அஜீவப் பொருள்களின் இயல்பை விளக்குவோம். புத்கலம் என்னும் பொருள், உயிர்களில் படிந்து அவற்றைப் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்விக்கும் தன்மையுள்ளது. புத்கலம் என்பதில் ஐந்து புலன்களும், ஐம்புலன்களும் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெயிலும், நிழலும், ஒளியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு பூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்குமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) மாறும் தன்மையுள்ளது இந்தப் புத்கலம். புத்கலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம், துக்கம் முதலியவற்றையும் பிறத்தல் வாழ்தல் இறத்தல் முதலியலற்றையும் புத்கலப்பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்றை அடைவது புத்தகலப் பொருளினாலேதான்.

     தர்மம் அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்திகாயம் என்றும் கூறப்படும் (இவற்றைப் புண்ணியம் பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம் அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு). தர்மம் அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறது அவ்வாறு உயிர்கள் இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப்பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல் ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின்

உதவியினாலாகும். இருத்தல், நிற்றல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்கலங்களால் உண்டாகும்

பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

    ‘‘தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்
    பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய்
    அப்படித் தாக அதன்மாத்தி காயமும்
    எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்’’

                               (மணிமேகலை 27;187 - 190)

எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அதர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.4

     காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்.

    ‘‘காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்
    மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆகும்’’

                              (மணிமேகலை 27;191 - 192)

     ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம்பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புத்கலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்குவதற்கு இடம்கொடுப்பது ஆகாயம்.

    ‘‘...ஆகாயம் எல்லாப் பொருட்கும்
    பூக்கும்இடங் கொடுக்கும்புரிவிற் றாகும்’’

                             (மணிமேகலை, 27;193 - 194)

     ஆகாயம் லோகாகாயம் என்றும், அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடங்கொடுத்து நிற்பது.

     இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.

3,4. புண்ணியம், பாவம் (நல்வினை, தீவினை); (இவற்றை, மேலே அஜீவப் பொருள்களில் கூறப்பட்ட தர்மம் அதர்மம் எனக் கருதுவது தவறு. இவை வெவ்வேறு பொருள்கள் என்பது மேலே விளக்கப்பட்டது). இந்தப் புண்ணிய பாவங்கள் மூன்று வகையாக உயிருடன் கலக்கின்றன. மனத்தினால் நினைப்பதும் வாக்கினால் சொல்வதும் காயத்தினால் செய்வதும் ஆக மூன்று வகை நல்ல எண்ணங்களாலும் நல்ல சொற்களினாலும் நல்ல செய்கைகளினாலும் பெறப்பட்ட புண்ணியமானது, உயிர்களை மனிதராகவும் தேவராகவும் பிறக்கச்செய்து அறிவு, செல்வம், இன்பம், புகழ், மேன்மை, சிறப்பு முதலிய நன்மைகளை யடையச் செய்கிறது. தீய எண்ணங்களாலும், தீய சொற்களாலும், தீய செய்கைகளினாலும் உண்டான பாவமானது உயிர்களை நரககதி, விலங்குகதி முதலிய இழிந்த பிறப்புகளில் பிறக்கச் செய்து அறிவின்மை, துன்பம், இகழ்ச்சி, வறுமை, சிறுமை முதலிய துன்பங்களை அடையச் செய்கிறது.

       5. ஊற்று (ஆஸ்ரவம்): நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல, நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் உயிரில் சுரப்பது (சேர்வது) ஊற்று எனப்படும். மனம் வாக்கு காயங்களின் வழியாக ஊற்றுக்கள் உயிரிடம் வந்து சேர்கின்றன. இதனைக் கன்மத் தொடர்ச்சி அல்லது பொறிவழிச் சேறல் என்றும் கூறுவர்.

       6. செறிப்பு (ஸம்வரை): மேலே கூறப்பட்ட இருவினைகளும் சுரக்கும் ஊற்றினது வழியை அடைத்து விடுவது செறிப்பு அல்லது ஸம்வரை எனப்படும். உயிர், முன்பு செய்த இருவினைகளை மறுபிறப்பில் துய்த்து ஒழிக்கும் போதே புதிதாக வினைகளைச் செய்து மீண்டும் கர்மத்தைத் தேடிக்கொள்கின்றன. உயிர்கள் தாம் முன்பு செய்த வினைப்பயன்களைத் துய்த்து ஒழிக்கும் போது, புதிய கர்மங்கள் வந்து சேராதபடி தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பது தான் செறிப்பு என்பது, ஒரு குளத்திற்கு நீர் வரும் கால்வாய்களை அடைத்துவிட்டால், அக் குளத்தில் மேன்மேலும் நீர் பெருகாமல் தடைப்படுவது போன்று, மனம் வாக்கு காயம் ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

       7. உதிர்ப்பு (நிர்ஜரை); இருவினை ஊற்று உயிரினிடத்து மேன்மேலும் பெருகாதபடி தடுத்தபின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஜரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம், சுக்கிலத்தியானம் முதலியவற்றால் செய்ய வேண்டும்.

    ‘‘வரும்பாவம் எதிர்காத்து மன்னுந்தம் பழவினையும்
    ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தூய்மை வீடென்றான்’’.
                                (நீலகேசி, மொக்கல 312)

     இதன் பொருள், ‘‘வருகின்ற கர்மங்களைக் குப்தி, சமிதி முதலாயினவற்றால் அடைந்து தபஸ் ஸம்ய மாதிகளால் நின்ற கர்மங்களை நிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் கண் மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவதென்று சொல்லுவது’’ (சமயதிவாகர வாமன முனிவர் உரை).

       8. கட்டு (பந்தம்); மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலிய வற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு  அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தௌ¤த்தால், அவ்விரும்பு நீரை இழுத்துக்கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன் கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக்கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. உயிரைத் துணியாகவும், ஐம்புலன் வாக்கு காயம் முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுக்காகவும் உபமான உபமேயப்படுத்திக் கூறுவர்.

       9. வீடு (மோக்ஷம்); ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவலதரிசனம், கேவல வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோக்ஷம் அல்லது வீடு எனப்படும்.

    ‘‘வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்
    அருவினைப்பயன் அனுபவித் தறுத்திடுதல்
    அது வீடாகும்’’ (மணிமேகலை, 27;199 - 201)

     இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமண சமய நூல்களில் கண்டுகொள்க.

     குறிப்பு: சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

     மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒரு தன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத் திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாதது.

    ‘‘மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள்
                                            தம்மைப்
    பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி
    உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும்
    இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்’’.

                               (சிந்தாமணி, கேமசரியார், 25)

     கீழ்க்காணும் சித்திரம் சமண சமய தத்வத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம்செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.

                          

     பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

     மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின்மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோக்ஷம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.

____________________________________________________________________________


3. தொடர்புரை I காண்க.

4. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) "தன்மம்... நன்மையைப் பயப்பது; அதன்மம்... "தீமையைப் பயப்பது" என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.