தொடர்புரை 5.
அகத்தியர்.
' விடையுகைத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேனாள் வடமொழிக்குரைத் தாங்கு இயன்மலயமா முனிக்குத் திடமுறுத்தியம் மொழிக்கு எதிராக்கிய தென்சொல் மடமகட்கு அரங்கென்பது வழுதிநாடன்றோ? ' - திருவிளையாடற்புராணம். ' வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனின் கடல்வரைப்பில் இதன்பெருமை யாவரே கணித்தறிவார்? ' ' இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் '. -காஞ்சிப்புராணம். இவ்வாறு சைவ நூல்கள் கூறாநிற்க, பௌத்த நூலாசிரியர் தமது பெரியாராகிய அவலோகிதர் வடமொழி தென்மொழிகளைப் பாணினிக்கும் அகத்தியருக்கும் அறிவுறுத்தியதாகக் கூறுகின்றனர். பாணினி முனிவர் வடமொழி இலக்கண அறிவை நிரம்பப் பெறுவான் வேண்டித் தவங்கிடந்தாரென்றும், அவலோகிதீஸ்வரர் அவருக்குத் தோன்றி அருள்புரிந்தாரென்றும், அதன் பின்னரே அவர் வடமொழி இலக்கணத்தை இயற்றினார் என்றும் பிற்காலத்துப் பௌத்த ஆசிரியரான 'தாரநாதர்' என்பார் எழுதியிருக்கின்றார். இக்கொள்கைக்கு ஆதாரமாக, 'மஞ்ஜூ ஸ்ரீ மூல மந்த்ர' என்னும் நூலினின்றும் மேற்கோள் காட்டுகின்றார். 'புத்தமித்திரனார்' என்னும் தமி.ழ் நாட்டுப் பௌத்தரும் அவலோகிதீஸ்வரரே அகத்தியனாருக்குத் தமிழ் அறிவுறுத்தினார் என்று தாம் இயற்றியுள்ள வீரசோழியாம் என்னும் நூலில் கூறியிருக்கின்றார். அச்செய்யுள் இது : ' ஆயுங்குணத் தவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்(டு) ஏயும் புவனிக்கியம்பிய தண் தமிழ் ஈங்குரைக்க நீயும் உளையோ? எனின், கருடன் சென்ற நீள்விசும்பில் ஈயும் பறக்கும் இதற்கென்கொலோ சொல்லும் ஏந்திழையே. ' அவலோகிதீஸ்வரரே தமிழ் மொழியை உண்டாக்கினார் என்பதும் புத்தமித்திரனார் கருத்து. இதனைப் 'பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மொய்த்தமிழே' என்னும் கிரியாபதப்படலக் கடைசிச் செய்யுளடியாலும் அறியலாம். அகத்திய முனிவர் பொதிகை மலையில் எழுந்தருளியிருக்கிறார் என்று கூறப்படுகின்றது போலவே, அவலோகிதரும் பொதிகை மலையில் எழுந்தருளியிருக்கின்றாரென்று பௌத்தர்கள் கூறியிருக்கின்றார்கள். [அவலோகித ஈஸ்வரராகிய போதிசத்வருக்கு 'லோகீஸ்வரர்' என்றும், 'உலகநாதர்' என்றும் பெயர்கள் கூறுவதுண்டு.] பௌத்த மத நூல்களை ஆராய்வதன் பொருட்டு, இந்தியாவில் கி. பி. 629 முதல் 645 வரையில் சுற்றுப்பிரயாணம் செய்த 'யுவாங் சுவாங்' என்னும் சீனநாட்டுப் பௌத்த ஆசிரியர், அவலோகிதர் பொதிகை மலையில் எழுந்தருளியிருப்பதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்: மலகோட்டா (பாண்டியநாடு), தென் திசையில் கடலருகில் மலய மலைகளால் சூழப்பட்டிருக்கின்றது. இந்த மலைகளில் சந்தன மரங்கள் வளருகின்றன. மலய மலைகளுக்குக் கிழக்கில் பொடாலகா மலை இருக்கின்றது. அம்மலைமேல் ஓர் ஏரி இருக்கின்றது. அந்த ஏரியிலிருந்து ஒரு பெரிய ஆறு உண்டாகின்றது. இந்த மலையில் போதிசத்வர் அவலோகிதர் வாழ்கின்றார். இந்த மலைக்கு வடகிழக்குப் பக்கமாகக் கடற்கரையோரத்தில் ஒரு பட்டினம் உண்டு. அப்பட்டினத்திலிருந்து இலங்கைத் தீவுக்குச் செல்ல மக்கள் மரக்கலம் ஏறுகின்றார்கள். இன்னும், பிற்காலத்தினராகிய 'தாரநாதர்' என்பவர் பொடாலகா என்னும் ஒரு மலை தென் திசையில் உள்ளதென்றும், அதில் அவலோகிதர் வாழ்கின்றாரென்றும், அங்குச் செல்லக் கடலையும், அப்பால் ஓர் ஆற்றையும், பிறகு ஒரு ஏரியையும் கடக்கவேண்டுமென்றும் எழுதியிருக்கின்றார். மேற்சொன்ன ஆசிரியர்கள் 'பொடாலகா' என்று கூறுவது பொதிகைமலை என்றும், அங்கிருந்து உண்டாவதாகக் கூறப்படும் ஆறு 'தாம்பிரவர்ணி' என்னும் பொருளை ஆறு என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். பொடாலகாவுக்கு (பொதிகைக்கு) வடகிழக்கே கடற்கரையில் உள்ளதாகக் கூறப்படும் துறைமுகப்பட்டினம் நாகைப்பட்டினமாகும் என்று சிலரும், பாண்டியநாட்டுக் 'கொற்கை' என்னும் துறைமுகமாகும் என்று வேறு சிலரும் கருதுகின்றார். மேற் கூறப்பட்ட 'தாரநாதர்' என்னும் பௌத்த ஆசிரியரே பொதிகை மலையில் வீற்றிருக்கும் அவலோகிதரைப்பற்றி இன்னும் சில செய்திகள் கூறியிருக்கின்றார். பௌத்த மதத்தில் ஆர்வமிக்க பிக்ஷ¨க்களிற் பலர் பொதிகை மலைக்கு அவலோகிதரைக் காண அடிக்கடி யாத்திரை செய்து வந்ததாகவும், அவ்வாறு சென்றவர்களில் ஒருவர் அப்பெரியாரைத் துதித்து நாகர்களும் அசுரர்களும் பாடிய இன்னிசையைக் கேட்டதாகவும், இன்னொரு யாத்திரிகர் அவலோகிதரின் உருவச்சிலையொன்றனை அங்குக் கண்டதாகவும், சாந்திவர்மன் என்னும் வேறொரு பௌத்த யாத்திரிகர் தெய்வ அருளினால் அந்த மலையுச்சிக்குச் சென்றதாகவும், ஆனால் அந்த இடம் வெறுமையாகக் கிடந்ததைக் கண்டதாகவும் அவர் எழுதியிருக்கின்றார். பழைய பௌத்த நூலாகிய மணிமேகலையில் அகத்தியரைப்பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதெனினும், அவலோகிதரைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. கி. பி. ஏழாம் நூற்றாண்டில் சீன யாத்திரிகராலும், கி. பி. பதினொராம் நூற்றாண்டில் புத்த மித்திரராலும், இவருக்கும் பிற்பட்டவராகிய தாரநாதராலும், பொதிகையில் அவலோகிதர் வாழ்கின்றார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் கூறப்படுகின்றன. கி. பி. 719 -இல் சீன தேசம் சென்ற தமிழ்ப் பௌத்தராகிய வச்சிரபோதி என்பவர் பாண்டிய தேசத்து மலய நாட்டில் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகின்றார். இவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராயும்போது, மணிமேகலை நூல் இயற்றப்பட்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில், பாண்டிய தேசத்து மலய நாட்டில் மகாயான பௌத்தர்கள் இருந்தார்கள் என்பதும், அவர்கள் பொதிகை மலையில் போதிசத்வர் அவலோகிதருக்குக் கோயில் அமைத்திருந்தார்கள் என்பதும், அவலோகிதரிடத்தில் அகத்தியர் தமிழ் பயின்றார் என்னும் கொள்கையை அவர்கள் உண்டாக்கியிருக்கக்கூடும் என்பதும், பிற்காலத்தில் பௌத்த மதம் தமிழ் நாட்டில் வீழ்ச்சியடைந்த பின்னர்ப் பொதிகையிலிருந்த அவலோகிதர் கோயில் அழிந்துவிட்டிருக்க வேண்டும் என்பதும் தெரிகின்றன.
|