தொடர்புரை 7.
வீரசோழியம்.
பதினொராம் நூற்றாண்டில், வீர ராசேந்திரன் காலத்தில் இயற்றப்பட்ட வீரசோழிய இலக்கணம் அக்காலத்திலிருந்தே வழக்காறற்றுவிட்டது. இந்நூலுக்குப் பின்னர், பன்னிரண்டாம் நூற்றாண்டில், மூன்றாங் குலோத்துங்கன் (கி. பி. 1178 - 1216) காலத்தில், இயற்றப்பெற்ற 'நன்னூல்' புலவரால் போற்றப்பட்டு இன்றளவும் வழக்காற்றில் இருந்துவருகின்றது. வீரசோழியம் பண்டிதரால் போற்றப்படாமல் ஏன் வழக்காறற்றுவிட்டது? சோழ அரசனால் போற்றப்பட்டும், அவன் பெயரால் இயற்றப்பட்டும், கடவுளே இந்நூலுக்கு உடன்பட்டுப் போற்றியதாகக் கதை கற்பிக்கப்பட்டும், இந்நூல் பயிலாமல் வழக்கொழிந்த காரணம் யாது? காஞ்சீபுரத்தில் கந்தபுராணத்தை அரங்கேற்றுங்கால், அப்புராணத்தின் முதற்பாட்டு முதற்சீரில் 'திகடசக்கர' என வரும் சொற்றொடரில், 'திகழ் + தசக்கர' என்பது 'திகட சக்கர' என்று ழவ்வும் தவ்வும் டவ்வானதற்கு இலக்கணவிதி காட்டும்படி சபையோர் கேட்க, அதற்கு ஆசிரியர் விடை கூறத் தெரியாமல் திகைக்க, சிவபிரானே சோழிய வேளாளனாய் வந்து வீர சோழியத்தினின்று இலக்கணவிதி காட்டினார் என்பது கதை. இவ்வாறு சிவபெருமானாலே போற்றப்பட்ட ஒரு நூல் ஏன் வழக்காறற்றுவிட்டது? தமிழ்மரபுக்குப் புறம்பான நூலைத் தமிழர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளார். வீரசோழியம் வடநூல் மரபைத் தழுவி எழுதப்பட்டது. முக்கியமாக யாப்பிலக்கணம் பெரிதும் வடமொழிச் சார்பாக இருக்கின்றது. அன்றியும், இது எதிர்நூல். இது எதிர் நூல் என்பதை
' ஆரவார விலக்கணநூ லைந்துமுழங்க வதற்கெதிர்நூல் பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல் வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே '
என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம். மகாவித்வான் சபாபதி நாவலர் அவர்கள் தாம் இயற்றிய 'திராவிடப் பிரகாசிகை'யில், இலக்கணமரபியலில், வீர சோழியத்தைப்பற்றிக் கூறுவதை ஈண்டு எடுத்துக்காட்டுவது பொருத்தமுடைத்து. அது வருமாறு : "வீரசோழியம்:- இந்நூலாசிரியர், * அருகந்தருட்பட்ட புத்தமித்திரனார். இஃது எழுத்துச் சொற்பொருள் யாப்பணியென்னும் ஐந்திலக்கணமும் உணர்த்துமொரு சிறுநூல். 'ஏதமறு சகாத்த மெழுநூற்றிற் கச்சியப்ப சிவாசாரியர் தாம் பாடிய கந்தபுராணம் அரங்கேற்றுழிக் 'திகடசக்கரம்' என்னும் புணர்ச்சி முடிபிற்கு விதி இந்நூல் கொண்டு காட்டினார் என்று பதிப்புரைகாரர் உரைத்தார். வீரசோழியம் அகத்தியத்தின் வழித் தோன்றிய தொல்காப்பியத்தினையும், வேறு சிலநூல்களையும் முதலாகக் கொண்டு செய்ததோர் இயற்றமிழ்நூல். ஆசிரியர் தொல்காப்பியனார்,
' யரழ வென்னும் புள்ளி முன்னர் முதலா கெழுத்து ஙகரமொடு தோன்றும் '
என நூன்மரபுள்ளும், ' யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக் கசதப ஙஞநம வீரொற் றாகும் ' என மொழிமரபுள்ளும், யரழக்கள் கசதபக்களோடு தனி யொற்றாயும் ஈரொற்றாயும் மயங்குமென்று ஓதுதலானும்,
' யகர விறுதி வேற்றுமைப் பொருள்வயின் வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே,
' அல்வழி யெல்லா மியல்பென மொழிப ' என்று புள்ளிமயங்கியலுட் கூறிவைத்து, அவ்விதியை, ' ரகார விறுதி யகார வியற்றே,' ' ழகார விறுதி ரகார வியற்றே ' என ரகர யகரங்களும் பெறுமென மாட்டெறிந்தோதுதலானும், ழகரத்தின் முன் வந்து புணருங் க ச த பக்கள் இரு வழியினும் இயல்பாயும் வல்லெழுத்து இரட்டியும் புணர்ச்சி யுறுதலன்றித் திரியாவென்பது தௌளிதிற் பெறப்படுதலின், '. . . . . . . . . . . . . . . பதினைந்தொ டெண்ணிரண்டாய்த்
தோன்றுடற் பின்னர்த் தகாரம் வரினிரண் டுந்தொடர்பா னான்றவைந் தாமுட லாமுன்பி லொற்றுக் கழிவுமுண்டே ' எனப் புத்தமித்திரனார் வீரசோழியத்து, ழகரத்தின் முன் வருந் தகரம் டகரமாய்த் திரியும் என்றுரைத்தது, அங்ஙனம் போந்த தொல்காப்பிய விதிக்கு மாறுகோளென்று மறுக்கப் படுமென்க. அது தொல்காப்பிய விதிக்கு மாறுகோளாயினும், பிற்காலத்து இலக்கியங்களில் அங்ஙனம் போந்த பிரயோகங்கண்டு அவ்வாறு கூறப்பெறாரோவெனின், - சங்கத்துச் சான்றோர் இலக்கியங்களுள்ளும், பிற ஆன்றோர் இலக்கியங்களுள்ளும் அவ்வாறு போந்த பிரயோகம் யாண்டுங் காணப்படாமையானும், இனி அவ்வாறு போந்த இலங்கியங்காணப் படினும், தொல்காப்பிய மாறுகொளாகலின் வழுவென்று களையப்படுவதல்லது இலக்கணமென்று தழுவப்படாதாகலானும், அது பொருந்தாதென்றொழிக. இனிக் கந்த புராணத்துத் 'திகட சக்கரம்' எனவும், 'கீட்டிசை வாயில்' எனவும் போந்த இலக்கியப் பிரயோகங் கண்டு புத்தமித்திரர் அவ்வாறு இலக்கணங் கூறப்பெற்றாரெனின், - அது கந்த புராண இலக்கியப் பிரயோகம்பற்றி வீரசோழியத்தில் அங்ஙனம் இலக்கணங் கூறப்பட்டது, வீரசோழிய இலக்கணவிதி பற்றிக்கந்த புராணத்தில் இங்ஙனம் இலக்கியஞ் செய்யப்பட்டதென, ஒன்றனையொன்று பற்றுதலென்னுங் குற்றத்திற்கு இடனாமென்க. . . . . அற்றேல், கந்த புராணத்துத் 'திகடசக்கரம்', 'கீட்டிசைவாயில்' என்றிங்ஙனம் போந்த பிரயோகந் தொல்காப்பிய முதலிய இலக்கண வழுவாம்போலுமெனின், - அது இலக்கண வழுவாகாமை இலக்கியமரபியலுட் கந்தபுராண வரலாறு உரைப்புழிக் கூறுதும்" இலக்கியமரபியலில், 'கந்த புராணம்' என்னும் தலைப்பின்கீழ்க் கீழ்க்கண்டவாறு இவ்வாசிரியர் கூறுகின்றார் : " . . . . . அரங்கேற்றுழித் 'திகடசக்கர'மென்னுந் தலைச்செய்யுள் முதற்கண்ணதான 'திகழ்' என்னுஞ் சொல்லிறுதி ழகரந் தகர வல்லெழுத்தின் முன் டகரமாய்த் திரிந்ததற்கு விதி தொல்காப்பியத்தில் இல்லையென்று அவ்வரங்கிலுள்ள புலவரொருவர் தடை நிகழ்த்தினாரென்றும், கச்சியப்ப சிவாசாரியர், 'இத்தடை நியாயமாயினுங் குமரகோட்டத்தடிகள் அவ்வாறு எடுத்தருளிச் செய்ய நாம் முதற் கொண்டு பாடினாமாகலின், இதன்கண் குற்றமாராய்தல் முறையன்று' என்று விடை நிகழ்த்தினாரென்றுஞ் சிலர் கூறுப. ஆண்டு ழகரந்தகரத்தின் முன் டகரமாய்த் திரிந்தது 'விகட சக்கரன்' என்னும் எதுகை நோக்கியாகலின், அது தொல்காப்பிய விதியாமன்றி விரோதமாகாதென்க. இன்னோரன்ன செய்யுட்டிரிபுகள், ' கிளந்த வல்ல செய்யுளுட் டிரிநவும் ' என்னும் அதிகாரப் புறநடையால் அமைத்துக்கோடற் பாலனவென்க. இங்ஙனமாகலின், அங்ஙனம் புலவர் தடை நிகழ்த்தினாரென்பதூஉம், கச்சியப்பசிவாசாரியர் இங்ஙனம் விடை நிகழ்த்தினாரென்பதூஉம் பொருந்தாமையறிக. இப்பொருந்தாமையை மேலுந் தடை விடைகளால் விரிக்கிற் பெருகும்." _____________________________________________________________ * புத்தமித்திரனாரை அருகந்தர், அதாவது ஜைனர் என்று கூறுவது தவறு. புத்தமித்திரனார் பௌத்தர்.
முற்றிற்று.
|