இந்தச் சாசனம் கி. மு. 258 -இல் எழுதப்பட்டது. அசோக மன்னர், தமிழ்நாட்டிலும்,
இலங்கையிலும் தரும விஜயத்தை - அதாவது, பௌத்த தருமத்தைப் போதித்து அதனைப்
பரவச்செய்வதால் வந்த அறவெற்றியை - கைப்பற்றினார் என்னும் செய்தியை இச்சாசனம்
தெரிவிக்கின்றது. இதன் திரண்ட பொருள் என்னவென்றால், அசோக சக்கரவர்த்தி தூதர்களை (பிக்ஷக்களை)
அனுப்பிப் பௌத்த தருமத்தைத் தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் மற்றும் பல நாடுகளிலும்
பரவச்செய்தார் என்பதே. சரித்திர ஆராய்ச்சியாளர் அனைவரும் இக்கருத்தையே இச்சானப்பகுதி
விளக்குவதாகக் கூறுகின்றனர்.
அசோக மன்னர் காலத்தில்தான் பௌத்தமதம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பதற்கு
வேறுவிதமான புறச்சான்றும் கிடைக்கின்றது. மகாவம்சம், தீபவம்சம் என்னும் பௌத்த
நூல்கள் இலங்கையில் பௌத்தமதம் வந்த வரலாற்றினையும், அந்த மதத்தை இலங்கை அரசர்
எவ்வாறு போற்றிப் பாதுகாத்துவந்தனர் என்னும் வரலாற்றினையும் விரிவாகக் கூறுகின்றன.
இலங்கைத் தீவு தமிழ்நாட்டை யடுத்துள்ளதாகையாலும், தமிழ்நாட்டினைக் கடந்தே
இலங்கைக்குச் செல்லவேண்டுமாகையாலும், இலங்கையில் பௌத்த மதம் வந்த அதே காலத்தில்தான்
தமிழ்நாட்டிலும் பௌத்தமதம் வந்திருக்கவேண்டும் என்று துணியலாம். ஆகவே, தீபவம்சமும்
மகாவம்சமும் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம். பாடலீபுரம் என்னும் நகரத்தில் அசோக
சக்கரவர்த்தியின் ஆதரவில் மொக்கலபுத்த திஸ்ஸ என்னும் தேரரின் தலைமையில் மூன்றாவது
பௌத்த மகாநாடு கூடியதென்றும், ஒன்பது திங்கள் வரையில் அந்த மகாநாட்டில் பௌத்தமத
ஆராய்ச்சி நடைபெற்ற தென்றும், மகாநாடு முடிந்தபின்னர்ப் பௌத்த மதத்தைப்
பரப்புவதற்காகப் பல பிக்குகள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர் என்றும்,
இலங்கைக்கு அனுப்பப்பட்டவர் அசோகரது மகனாராகிய மகிந்தர் என்பவர் என்றும், இந்த
மகிந்தர் இத்திரியர், உத்தியர், சம்பலர், பத்திரசாரர், சாமனர சுமணர் என்னும்
பிக்குகளைத் தம்முடன் அழைத்துக்கொண்டு இலங்கை வந்து பௌத்த மதத்தைப் பரவச்செய்தார்
என்றும் இந்த நூல்கள் கூறுகின்றன. இந்த நூல்கள் கூறுகின்ற மகிந்தர் என்பவர்
மகேந்திரர் ஆவர். மகேந்திரர் என்னும் பெயர் பாளி மொழியில் மகிந்தர் என்று
வழங்கப்படும். இந்த மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரை இலங்கை நூல்கள் அசோகரது
மகனார் என்று கூறுகின்றன. ஆனால், இந்தியாவில் உள்ள நூல்கள் இவரை அசோகரது தம்பியார்
என்று கூறுகின்றன. மகனாராயினும் ஆகுக, தம்பியாராயினும் ஆகுக, இந்த மகேந்திரர்
அசோகரால் அனுப்பப்பட்டவர் என்பது மட்டும் உறுதி. அன்றியும், இவருடன் இலங்கைக்கு
வந்தவர்களில் ஒருவரான சாமனர சுமணர் என்பவர் அசோக மன்னரது பெண் வயிற்றுப் பேரர்
என்பதும் ஈண்டுக்குறிப்பிடத்தக்கது. இந்த மகேந்திரரும் அவரைச்சேர்ந்த ஐந்து
பிக்குகளும் கி. மு. 250 -இல் இலங்கைக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இதனால்,
அசோக மன்னர் காலத்தில் மகிந்தர் அல்லது மகேந்திரர் என்பவரால் இலங்கைத்தீவில்
பௌத்தமதம் பரவியது என்றும், அதே காலத்தில்தான் இலங்கையையடுத்த தமிழ் நாட்டிலும்
இந்த மதம் முதல் முதல் வந்திருக்கவேண்டும் என்றும் துணியலாம்.
மகேந்திரர் தமிழ் நாட்டில் வந்து பௌத்த மதத்தைப் போதித்ததாக இலங்கை நூல்கள்
கூறவில்லை. பண்டைக் காலத்தில் தமிழர் இலங்கைமேல் படையெடுத்துச்சென்று அடிக்கடி
அந்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டு வந்தபடியாலும், அடிக்கடி தமிழருக்கும் சிங்களவரான
இலங்கையருக்கும் போர் நிகழ்ந்துவந்தபடியாலும், மகேந்திரர் தமிழ் நாட்டில்
பௌத்தமதத்தைப் போதித்த செய்தியை இலங்கை நூல்கள் பகைமை காரணமாகக் கூறாமல் விட்டன
என்று உவின்சென்ட் ஸ்மித் என்னும் ஆசிரியர் தமது பழங்கால இந்தியா என்னும் நூலில்
கூறுகின்றார். இவர் கருத்தையே ஆராய்ச்சியாளரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். வட
இந்தியாவிலிருந்து தென் இலங்கைக்கு வந்த மகேந்திரர் கடல் வழியாகக் கப்பலில் பிரயாணம்
செய்திருக்கவேண்டும் என்றும், அவ்வாறு கடல் பிரயாணம் செய்தவர் இலங்கைக்குச்செல்லும்
வழியில் உள்ளதும் அக்காலத்துப் பேர் பெற்று விளங்கியதுமான காவிரிப்பூம்பட்டினத்தில்
தங்கியிருக்கக் கூடுமென்றும், அவ்வாறு தங்கியிருந்த காலத்தில் கட்டப் பட்டவைதாம்
அந்நகரத்தில் இருந்தனவாகத் தமிழ் நூல்களில் கூறப்படும் இந்திர விகாரைகளென்றும் மேல்
நாட்டுக் கீழ் நாட்டு ஆராய்ச்சியாளர் ஒரு முகமாகக் கூறுகின்றனர்.
அசோக மன்னர் காலத்தில் அவரால் அனுப்பப்பட்ட மகேந்திரரால் தமிழ் நாட்டில்
பௌத்த மதம் பரவியது என்பதை வற்புறுத்தும் மற்றொரு சான்றும்
நமக்குக்கிடைத்திருக்கின்றது. யுவாங்-சுவாங் என்னும் சீன தேசத்துப் பௌத்த
யாத்திரிகர் கி. பி. 640 - இல் தமிழ் நாட்டிற்கு வந்தபோது, பாண்டியநாட்டு
மதுரைமாநகரின் கீழ்ப்புறத்தில் அசோகரது உடன் பிறந்தவராகிய மகேந்திரரால் கட்டப்பட்ட
ஒரு பௌத்தப்பள்ளியும், இந்தப்பள்ளிக்குக் கிழக்கில் அசோக சக்கரவர்த்தியால்
அமைக்கப்பட்ட ஒரு விகாரையும் இடிந்து சிதைந்துபோன நிலையில் காணப்பட்டனவாகத் தமது
யாத்திரைக்குறிப்பில் எழுதியிருக்கின்றார். அன்றியும், காஞ்சீபுரத்திலும் அசோக
மன்னர் கட்டிய ஒரு தூபி இருந்ததென்றும் அவரே குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், இவர்
குறிப்பிடுகின்ற பௌத்தக் கட்டிடங்களைப்பற்றித் தமிழ் நூல்கள் ஒன்றும் கூறவில்லை.
மகேந்திரர் இலங்கையில் பௌத்த மதத்தைப் போதித்தபோது, இலங்கையரசனுடைய மாமனாரான
அரிட்டர் என்பவர் அந்த மதத்தை மேற்கொண்டு துறவு பூண்டு பிக்குவானார். இந்த அரிட்டர்
இலங்கை முழுவதும் அந்த மதத்தைப் பரப்புவதற்கு மகேந்திரருக்கு வேண்டிய உதவி செய்தார்
என்று மகாவம்சம் என்னும் நூல் கூறுகின்றது. பின்னர் மகேந்திரரும் அரிட்டரும்
சேர்ந்து பௌத்த மதத்தைத் தமிழ் நாட்டில் பரப்பியிருக்கக்கூடும். பாண்டிய நாட்டில்
மதுரை ஜில்லாவில் சில குகைகள் காணப்படுகின்றன. இக்குகைகளில் பிக்குகள்
படுத்துறங்குவதற்காகப் பாறையில் செதுக்கியமைக்கப்பட்ட படுக்கைகளும், அப்படுக்கையின்
கீழ்ச் சில எழுத்துக்களும் காணப்படுகின்றன. இக்கற்படுக்கைகளின் அமைப்பு முதலியவை,
இலங்கைத் தீவில் பௌத்தத் துறவிகள் தங்குவதற்காகப் பண்டைக் காலத்தில் அமைக்கப்பட்ட
குகையிலுள்ள படுக்கைகள் முதலியவற்றின் அமைப்பை ஒத்திருக்கின்றன. பௌத்தத் துறவிகள்
ஊருக்குள் வசிக்கக்கூடாதென்பது அம்மதக் கொள்கையாதலால், அவர்கள் வசிப்பதற்காக
மலைப்பாறைகளில் குகைகள் அமைப்பது பண்டைக்காலத்து வழக்கம். இலங்கையிலும் பாண்டி
நாட்டிலும் காணப்படும் இந்தக் குகைகளின் ஒற்றுமையமைப்பைக்கொண்டு இவை பௌத்தத்
துறவிகள் தங்குவதற்கென அமைக்கப்பட்டவை என்றும், இப்பாண்டி நாட்டுக் குகைகளில்
காணப்படும் எழுத்துக்களைக்கொண்டு (இவை அசோகர் காலத்துக் கல்வெட்டுச் சாசனங்களில்
காணப்படும் பிராமி எழுத்தை ஒத்திருப்பதால்), இவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டில்
அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சி வல்லவர் கூறுகின்றனர். இவ்வாறு
காணப்படும் பாண்டி நாட்டுக் குகைகளில் ஒன்று அரிட்டாபட்டி என்னும் கிராமத்துக்
கருகில் இருக்கின்றது. அரிட்டாபட்டி என்னும் பெயர், இலங்கையிலிருந்து வந்து தமிழ்
நாட்டில் பௌத்த மதத்தைப் பரவச்செய்ய மகேந்திரருக்கு உதவியாயிருந்த அரிட்டர் என்னும்
பிக்குவை நினைவூட்டுகின்றது. இந்த அரிட்டர் என்னும் பௌத்த முனிவர் இங்குள்ள குகையில்
தமது சீடருடன் வாழ்ந்திருக்கக் கூடும் என்றும், ஆனதுபற்றியே இக்குகைக்கருகில் உள்ள
சிற்றூர் அரிட்டாபட்டி என்று வழங்கலாயிற்று என்றும் கூறுவர். மகாவம்சம் என்னும் நூல்
மகா அரிட்டர் என்பவர் மகிந்தருடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு - அதாவது
தமிழ்நாட்டிற்கு - சென்று பௌத்த மதத்தைப் பரப்பினார் என்று சொல்வதைப் பாண்டி
நாட்டில் உள்ள அரிட்டாபட்டி என்னும் பெயரும் அங்குள்ள குகைகளும் வலியுறுத்துகின்றன.
மேலே எடுத்துக்காட்டிய சான்றுகளினாலே, யாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை
கிடைக்கப்பெற்றோம். அதாவது, தமிழ் நாட்டில் பௌத்த மதம் எந்தக் காலத்தில் வந்தது?
இந்த மதத்தைக் கொண்டுவந்து இங்குப் புகுத்தியவர் யாவர்? என்னும் வினாக்களுக்கு, கி.
மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்த மதம் தமிழ் நாட்டில் வந்ததென்றும், இதனை இங்குக்
கொண்டுவந்து புகுத்தியவர் அசோக மன்னரும் அவரது உறவினராகிய மகேந்திரரும் மற்றும்
அவரைச் சேர்ந்த பிக்குகளுமாவர் என்றும் விடை கண்டோம்.
|