பக்கம் எண் :

பக்கம் எண் :6

ஐந்தாம் அதிகாரம்.

இந்து மதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்.

தமிழ் நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும், அதன் பெரிய கொள்கைகளில் பல நாளது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக்கொள்கைமட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக்கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக்காலத்தில் நடைமுறையிலிருந்து சிறந்த கொள்கைகளை இந்துமதம் தன்னிடத்தில் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்துமதத்தின் உட் பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டு, 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. இது நிற்க.

பௌத்த மதக்கொள்கைகள் பல இந்து மதத்தில் நின்று நிலவுகின்றனவென்று சொன்னோம். அவை எவை என்பதை இங்கு ஆராய்வோம். இக்காலத்தில் இந்துக்கள் அவை பௌத்தமதக் கொள்கைகள் என்பதை முழுவதும் மறந்துவிட்டார்கள். இந்து மதத்தில் காணப்படும் பௌத்த மதக் கொள்கைகளாவன:-


1. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது

இந்து மதம் பௌத்தமதத்தை அழித்துவிட்ட போதிலும், அந்த மதத்தை உண்டாக்கின புத்தரை ஒரு தெய்வமாக ஏற்றுக்கொண்டது. அதாவது, புத்தர் திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று ஒப்புக்கொண்டுவிட்டது. ஏன் ஒப்புக்கொண்டது? புத்தரின் உருவ வழிபாடு அக்காலத்து மக்களிடையே வேரூன்றியிருந்தபடியால், பௌத்த மதத்தை அழித்துவிட்ட போதிலும், புத்தரைத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இந்து மதத்திற்கு ஏற்பட்டதுபோலும்.

புத்தர் திருமாலின் அவதாரமாக இந்து மதத்தில் புகுத்தப்பட்ட காலம் இன்னது என்று துணிந்துகூற இயலவில்லை. பௌத்த மதத்தவராகிய அமரசிம்மர் தாம் இயற்றிய 'அமரகோசம்' என்னும் நிகண்டிலே, புத்தர் மாயாதேவிக்கும் சுத்தோதனருக்கும் பிறந்தவர் என்று கூறியிருக்கிறாரே தவிர, திருமாலின் அவதாரங்களில் ஒருவரென்று கூறவில்லை. ஆனால், 'க்ஷமேந்திரர்' என்பார் தாம் இயற்றிய 'தசாவதார சரித்திரத்தில்', புத்தரைத் திருமாலின் ஒன்பதாவது அவதாரம் என்று எழுதியிருக்கின்றார். ஆகையால், அமரகோசம், தசாவதார சரித்திரம் என்னும் இவ்விரண்டு நூல்களும் இயற்றப்பட்ட காலத்தின் இடைப்பகுதியில், புத்தர் திருமாலின் ஓர் அவதாரமாகச் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும் என்று துணியலாம்.

இந்து மதத்தின் ஒரு பிரிவான வைணவ மதம் புத்தரைத் திருமாலின் ஓர் அவதாரமாக ஏற்றுக்கொண்டது போலவே, மற்றொரு பிரிவாகிய சைவசமயமும் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டது. சாஸ்தா, அல்லது ஐயனார் என்னும் பெயருடன் புத்தரைத் தனது தேவர்களில் ஒருவராகச் சேர்த்துக்கொண்டு, பின்னர், முருகர், அல்லது சுப்பிரமணியரோடு புத்தரை ஒற்றுமைப்படுத்திக்கொண்டது. அன்றியும், பௌத்தரின் தாராதேவி முதலான தெய்வங்களைத் 'திரௌபதி அம்மன்' என்றும், புத்தரைத் 'தருமராசன்' என்றும் பெயர் சூட்டி ஏற்றுக்கொண்டது. (தொடர்புரை 3 காண்க.)

2. வேள்வியில் உயிர்க்கொலை நீக்கியது

யாகங்களில் ஆடு மாடு முதலியவற்றைக் கொல்வது பெரும்பாவமென்பது பௌத்தமதக் கொள்கை. அதற்கு நேர்மாறாக, யாகங்களில் ஆடு மாடு குதிரை முதலியவற்றைப் பலியிடவேண்டுமென்பது பிராமண மதத்தின் கொள்கையாக இருந்துவந்தது. கடைசியாக,. வைதீக பிராமண மதம் தனது கொள்கையை விட்டுக்கொடுத்து, பௌத்த மதக் கொள்கையாகிய கொல்லாமையை ஏற்றுக்கொண்டது. அன்றியும், பிராமணர் மாமிசம் உண்டுவந்ததையும் நிறுத்திச் 'சைவ' உணவை உண்ணும்படி செய்ததும் பௌத்த மதந்தான். வைதீக மதத்தார் மாமிசம் உண்பதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் தடுத்து, அவற்றை நிறுத்தச் செய்த பெருமை பௌத்த மதத்திற்குமட்டுமன்று, ஆருகத மதத்திற்கும் உரியதாகும்.

3. அரசமரத்தைத் தொழுதல்

'போதி' என்னும் அரசமரம் பௌத்தர்களுக்குப் புனிதமானது. ஏனென்றால், அரசமரத்தடியில் இருந்த காலத்தில்தான் புத்தருக்கு மெய்யறிவு உண்டாயிற்று. ஆகையால், பௌத்தர்கள் அரச மரத்தைப் புத்தரைப் போலவே போற்றி வணங்குவர். புத்தரைக் கூறும்போது, 'மருள் அறுத்த பெரும்போதி மாதவன்' என்றும், 'பவளச் செஞ்சுடர் மரகதப் பாசடை, பசும்பொன் மாச்சினை விசும்பகம் புதைக்கும், போதியந்திருநிழற் புனிதன்' என்றும், 'பாசடைப்போதிப் பேரருள் வாமன்' என்றும், 'வாடாப்போதி மாகதப் பாசடை மாநிழல் அமர்ந்தோன்' என்றும், அரசமரத்துடன் அவரைத் தொடர்புப் படுத்தியே நூல்கள் கூறுகின்றன. பௌத்தரைப் 'போதியர்' (அரசமரத்தைத் தொழுவோர்) என்று 'தேவாரம்' கூறுகின்றது. சங்ககாலத்திலிருந்த ஒரு பௌத்தப் புலவருக்கு 'இளம்போதியார்' என்னும் பெயர் இருந்ததும் ஈண்டு நினைவுகூரற்பாலது. அன்றியும், 'புத்தர்மேல் பத்திக்குக் காரணமான போதி விருட்சம் நின்னால் (பௌத்தரால்) புத்தனோபாதி (புத்த சம்பந்தமானது) என்று தொழப்பட்டவாறு போல' எனவும், 'புத்த பத்தி நிமித்தமாக போதி விருட்சம் தொழுமாறு போல்' எனவும் வருகின்ற நீலகேசி உரைப்பகுதிகலாலும் பௌத்தர் அரசமரத்தைத் தொழுதுவந்த செய்தி அறியப்படும். இந்து மதம் பௌத்த மதத்தை அழித்து விட்டதெனினும், பௌத்தமதக் கொள்கையாகிய அரசமர வணக்கம் ஒழிக்கப்படாமல், இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றது. அரசமரத்தை வலம் வந்து வணங்குகின்ற இக்காலத்து இந்துக்கள், இந்த வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பதை அறியார். ஆனால், இவ்வணக்கத்தை உண்டாக்கியவர் பௌத்தர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

4. மடங்கள் ஏற்படுத்தியது

சைவ, வைணவ, ஸ்மார்த்த மதத்தினர் மடங்களை அமைத்து, அவற்றில் தத்தம் மதத் தலைவர்கள் இருந்து சமயத்தொண்டாற்ற ஏற்பாடு செய்திருக்கின்றார்கள். இவைகளுக்கு 'மடம்' என்றும், 'சிம்மாசனம்' என்றும், 'பீடம்' என்றும் பெயர்கள் வழங்கிவருகின்றன. இந்நிலையங்கள் பௌத்தரின் பள்ளிகளைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை என்பது ஆராய்ச்சியாளரின் துணிபு. பௌத்த மதத்தின் உயிர் நாடியாயிருந்தது சங்கம். சங்கம் என்பது பௌத்தத் துறவிகளின் கூட்டம். இந்தத் துறவிகள் ஊர்தோறும் பள்ளி அல்லது மடங்களை அமைத்து, அவற்றில் தங்கி, நாட்டுமக்களுக்கு மதபோதனை செய்து தங்கள் சமயத்தைப் பரவச் செய்துவந்தார்கள். இந்த நிலையங்களை முதல் முதல் உண்டாக்கிய பெருமை புத்த தேவருக்கே உரியது. புத்தர் இந்த நிலையங்களை உண்டாக்குவதற்கு முன்னே, துறவிகளும் சமயத் தலைவர்களும் காடுகள், மரச் சோலைகள் முதலிய இடங்களில் வசித்துவந்தனர். பின்னர், பௌத்த மடங்களைப் பின்பற்றி, ஏனைய சமயத்தவரும் மடங்கள் அமைக்கும் வழக்கத்தை மேற்கொண்டனர் என்பது ஆராய்ச்சியாளர் கண்ட முடிபு.

5. அத்வைதம் உண்டானது

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சங்கராசாரியாரால் உண்டாக்கப்பட்ட 'மாயாவாத மதம்' என்றும் 'ஏகான்மவாத மதம்' என்றும், 'ஸ்மார்த்த மதம்' என்றும், சொல்லப்படுகின்ற 'அத்வைத மதத்தின்' அடிப்படையான கொள்கை மகாயான பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிற் சிறந்த ஆன்றோர் கூறுகின்றார். அத்வைத மதத்தை உண்டாக்கின சங்கராசாரியார், பௌத்த குரு ஒருவரிடம் பயின்ற மாணவர் என்று சிலர் கூறுவர். அங்ஙனம் அன்று; சங்கராசாரியாரின் குரு கோவிந்த பாதர் என்றும், கோவிந்த பாதரின் குரு கௌட பாதர் என்னும் பௌத்தர் என்றும் வேறு சிலர் கூறுவர். அன்றியும், பௌத்த மதத்தின் பிரிவுகளான விஞ்ஞானவாத, சூனியவாத மதங்கள் அதிகமாகப் பரவியிருந்த சௌராஷ்டிர தேசத்தில் சங்கரர் கல்வி பயின்றார் என்றும், அங்குப் பயின்றபடியினால்தான் சூனியவாத பௌத்தத்தினின்று மாயாவாதக் கருத்தினைப் பெற்றுக்கொண்டார் என்றும் மற்றுஞ் சிலர் கூறுவர். இவர் எவ்விடத்தில் யாரிடத்தில் கல்வி பயின்றார் என்னும் ஆராய்ச்சியிற் புகவேண்டுவதில்லை. இவர் தமது மாயாவாதக் கொள்கையைப் பௌத்தமதத்தினின்று பெற்றுக்கொண்டார் என்பதுமட்டும் உறுதியே. ஏனென்றால், வைணவ ஆசாரியருள் தலை சிறந்தவரும் ஸ்ரீபாஷ்யம் அருளிச்செய்தவருமான இராமாநுசர், சங்கராசாரியாரின் அத்வைத மதத்தைப் 'பிரச்சன்ன பௌத்தம்,' அதாவது மாறுவேடம் பூண்டுவந்த பௌத்தம் என்று கூறியிருக்கின்றார். துவைத மதத்தின் தலைவராகிய மாதவாசாரியாரும் அவ்வாறே சங்கரரின் அத்வைத மதத்தைப் 'பிரச்சன்ன பௌத்தம்' என்று கூறியிருக்கின்றார். பதுமபுராணத்தின் உத்தரகாண்டத்திலும் சங்கராசாரியாரின் மாயாவாத மதம் பிரச்சன்ன பௌத்தம் என்றே கூறப்படுகின்றது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள்கைகள் பௌத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.

மேலே காட்டிய ஐந்து கொள்கைகளும் பௌத்த மதத்தைச் சார்ந்தவை என்பதும், அக்கொள்கைகள் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றளவும் நிலைபெற்றிருக்கின்றன என்பதும் விளக்கப்பட்டன. இதினின்று நாம் அறியக்கிடப்பது யாது? இந்துமதம் பௌத்த மதத்தை அழித்துவிட்டது; ஆனால், பௌத்தமதக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இன்றளவும் கையாண்டுவருகின்றது என்பதே. பௌத்த மதம் தோல்வியுற்றது; ஆனால், அதன் கொள்கை வெற்றி பெற்றது.