ஆத
ஆத்தோரம்
கொடிக்காலாம்
அரும்பரும்பா வெற்றிலையாம்
போட்டால் சிவக்குதில்லை
பொன்மயிலே உன்மயக்கம்.
105
கான மயிலேஉன்னைக்
கைவிடலை என்றுசொல்லி
வேலவர் கோயிலிலே
வேட்டிபோட்டுத் தாண்டித்தாரேன்.
106
சாலை கடந்துவாடி
சந்தைப்பேட்டை தாண்டிவாடி
ஓடை கடந்துவாடி
ஓடிப்போவோம் ரெங்கூனுக்கு
107
நேத்துச் சமைந்தபிள்ளை
நெய்யும்சோறும் தின்றபிள்ளை
பார்த்துகிட்டுப் போறபிள்ளை
- உன்
பல்வரிசை பகட்டுதடி.
108
மூக்கெல்லாம் நீண்டபிள்ளை
முன்னாலே போறபிள்ளை
நாக்குச் சிவந்தபிள்ளை
நான்தாண்டி உன்புருசன்.
109
பச்சைப்பச்சைக் கொத்துமல்லி
பகலெல்லாம் ரத்னவல்லி
நீலவர்ணக் கொத்துமல்லி
நிற்கட்டுமா போகட்டுமா?
110
சித்தாடை வாங்கித்தாரேன்
சின்னமடி கட்டித்தாரேன்
பார்த்துப் பொறுக்கிடுங்க
பத்தினியே
மதனியாரே.
111
|