பக்கம் எண் :

காத்தவராயன் கதைப்பாடல்1

காத்தவராயன் கதைப்பாடல்
 
     திருச்சிழைம் பகுதிகள் தனக்கு நற்புத்தி புகட்டவேண்டும் துஷ்டருக்குச் சொன்ன நீதி பயன்படாது என்று தன்னைத் துஷ்டனென்று கூறிக் கொள்கிறான். இப்பகதி கைலைவாசம், சகுனக்கதை இவற்றை பிற்காலத்தில் புனைந்தவர்கள் சேர்த்து விட்ட பகுதிகளாகும்.
 
     எனவே கதையின் பழைய பகுதியும், நாட்டுப்பாடல் வடிவில் மக்கள் போற்றிய கதைக் கருவும், காத்தவராயன் துணிவாக மனுதர்ம அநீதியை எதிர்த்துப் பிராம்மணப் பெண்ணை மணந்ததும், அதற்காகக் கழுவேறிச் சாகத் துணிவு கொண்டு வளர்ப்புத் தந்தை கையில் அகப்பட்டதுமே.
 
     தான் குற்றவாளியல்லவென்று அவன் வாதிக்கும் பகுதிகளே பழமையானவை.
 
     தன்னைத்தான் துஷ்டன், குற்றவாளி என்று கூறிக்கொள்ளும் பகுதிகள், உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள், சாதி உயர்வைப் பாதுகாக்க முயன்றவர்கள், சேர்த்ததுதான். கதையின் இவ்விரு பகுதிகளையும் ஆழ்ந்து படிப்பவர்கள் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
 
     முத்துப்பட்டன் கதையிலும், பொம்மக்கா, திம்மக்கா என்ற இரண்டு பெண்களும் சக்கிலியப் பெண்களல்லர் என்றும், அவர்கள் பிராம்மணப் பெண்களென்றும் கதையை மாற்றிய செய்தியை முத்துப்பட்டன் கதை ஆய்வுரையில் கூறியுள்ளேன்.
 
     அதுபோலவே சமூகச் சீர்திருத்த ஆற்றல் கொண்ட இலக்கியங்களை அழிக்கவும், மாற்றவும், சிதைக்கவும், மேல் சாதியினரும், சீர்திருத்தங்களால் தம் செல்வாக்கை இழக்கக் கூடியவர்களும் முயன்று வந்திருக்கிறார்கள்.
 
     எனவே நாட்டுப் பாடல் கதைகளைப் படிக்கும் போது நாட்டுப் பாமர மக்கள் கண்ணோட்டத்தில் யாரைக் கதைத்தலைவர் தலைவியராகக் கொள்ளுவார்கள் என்பதை மனத்தில் கொண்டு, அவர்களது விடுதலை ஆர்வத்தையும் மனத்தில் கொண்டு கதைக் கருவினைப் பிரித்தறிய வேண்டும். பாமர மக்களது சிந்தனைகளை அடிமைப்படுத்தும் முயற்சிகளை எடுத்துக்காட்டவேண்டும்.
 
     ஆராய்ச்சியாளர்கள் முயன்றால் கதைப் பாடல்களில் நாட்டு மக்கள் படைப்பான பகுதியையும், அதற்கு முரணான இடைச் செருகல்களையும் எளிதில் அறியலாம்.