பக்கம் எண் :

56

பெரியோர் வாழ்விலே


     உடனே அவர் வண்டியை நிறுத்தச் சொன்னார். வேகமாகக் கீழே இறங்கினார். ‘விடு,
விடு’ என்று திரு.வி.க. நின்ற இடத்திற்குச் சென்றார். திரு.வி.க. அவரைக் கண்டு பயந்து
ஓடவில்லை. தைரியமாக நின்று கொண்டிருந்தார். அமீனா திரு.வி.க.வின் கையைப் பிடித்து
இழுத்துக் கொண்டு, நேராக அவரது தந்தையாரிடம் சென்றார்.

     இந்தக் காட்சியைக் கண்ட எல்லோரும், என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்று
கவலைப்பட்டார்கள். ஆனால் திரு.வி.க. துளியும் கவலைப்படவில்லை. தம்முடைய மகனை,
அமீனா இழுத்து வருவதைக் கண்ட தந்தையார் திடுக்கிட்டார். “மன்னிக்க வேண்டும்,
என்ன நடந்தது?” என்று பணிவோடு கேட்டார்.

     அமீனா நடந்ததைச் சொன்னார். பிறகு, “இவனை நீர் நல்ல முறையில் வளர்க்க
வேண்டும். இவன் பிற்காலத்தில் பெரிய அறிஞனாவான்” என்று கூறினார்.

     அமீனா வாய்க்குச் சர்க்கரை போட்டிருக்க வேண்டும். அவருடைய வாக்குப் பலித்து
விட்டதல்லவா?


* * *
 

     திரு.வி.க. சிறுவராயிருந்தபோதே, அவருடைய தந்தையார் கிராமத்திலிருந்து
சென்னைக்குக் குடும்பத்துடன் வந்துவிட்டார். நான்காவது ஐந்தாவது படிக்கும்போதெல்லாம்
அவர் மிகவும் பலவீனமாக இருப்பார். அவரது உடல் நிலை மோசமாயிருப்பதைக் கண்டு,
அவருடைய தந்தையார் மிகவும் கவலைப்பட்டார்.