தா. கண்ணன் :
உனக்குச் சொந்தமான பொருள்களை நான் கலைத்தது
குற்றம் என்கிறாய். அதனால் நீ கோபம் கொள்வது நியாயம் என்கிறாய்.
அப்படித்தானே?
அன்னம் :
ஆமாம்! அப்படித்தான்!
தா. கண்ணன் :
அதாவது, ஒருவர்க்குச் சொந்தமானதை மற்றவர்
கலைப்பது-குலைப்பது தவறு. அது பொருளுக்குரியவரை வெகுளச்
செய்யும் என்கிறாய். இல்லையா?
அம்பலம் :
ஆமாம்! ஆமாம்! அதைத்தான் அம்மா சொல்லிவிட்டாங்களே.
தா. கண்ணன் :
பெண்ணே, நான் வரும்போது நீ என்ன
செய்துகொண்டிருந்தாய்?
அன்னம் :
நானா? நீ மதம் பிடித்த யானையைப்போலக் கடையில்
நுழையும் போதா? நான் பாடிக்கொண்டிருந்தேன்.
தா. கண்ணன் :
நீ பாடிய பாட்டு என் வீட்டுச் சொத்து. அதைத்
தாறுமாறாகக் கலைத்து, அர்த்தத்தை அனர்த்தமாக்கினாய். என் செல்வம்
இப்படிச் சீரழிவதைப் பார்த்துக்கொண்டு நான் சினம் கொள்ளாமல்
இருக்க முடியுமா? என் கோபத்தைக் காட்டினேன். அத்தோடு
உன் குறையையும் காட்டினேன்.
அம்பலம் :
(சிரித்து) என்னது? பாட்டு உங்க வீட்டுச் சொத்தா? அவனவன்
பொன்னையும் பொருளையும் நிலபுலத்தையும் சொத்தாகச் சேர்த்து
வைப்பான். நீங்க பாட்டையே சொத்தா சேர்த்து வைத்துவிட்டீங்களா! |