|
கரும்பிலே முத்தீனும் கட்டழகன் காவலிலே. அதனைச் சுற்றியுள்ள சில ஊர்களிலும் “கழுவேற்றப் பாரிவேட்டை என்ற விழா ஒன்று பங்குனி பௌர்ணமி நாளில் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஒரு கதையைப் பாடி ஆடுகிறார்கள். அக்கதையே காத்தவராயன் கதைப் பாடல். இப்பாடலின் மாற்றுருவங்கள் பல உள்ளன என்றறிகிறேன். இப்பாடல் பல நூற்றாண்டுகளாக செவிவழி, வாய் வழியே நிலைத்து நிற்பதாகும். மிகப் பிற்பட்ட காலத்தே இதனை எழுதி வைத்திருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த பிரதி எனது நண்பர் சிவகுமாரன், ஒரு பாடகர் பாடக்கேட்டு எழுதியனுப்பியதாகும். அவருக்குக்கிடைத்த மற்றோர் பிரதியில் “குரோதன வருஷம் வைகாசி மாதம் 10ம் தேதியில் முடிக்கப்பட்டது” என்ற அடிக்குறிப்பு ஒன்று உள்ளது. |
|
இது ஒரு நாடோடி நாடகம் அல்லது கூத்துப் போல் (Folk play) அமைந்துள்ளது. விருத்தப்பாடல்கள், நாட்டுப் பாடல், கும்மி, வசனம் ஆகிய மூன்றுறுப்புகளால் அமைந்துள்ளது. இது பழமையில் நாடகமாக நடிக்கப்பட்டுப் பிற்காலத்தில் ஆட்டத்தோடு நின்றிருத்தல் கூடும். |
|
கதை நடந்த காலத்தைச் சரியாக நிர்ணயித்துக் கூறச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் கூறப்படும் சம்பவங்கள் விஜயநகர ஆட்சிக் காலத்திற்கு முந்தியவை என்று தோன்றுகின்றன. இது பாடப்பட்டு வருவதாதலால் பிற்காலச் சேர்க்கைகளும் நிரம்ப இருக்கின்றன. |
|
இக்கதையில் கருப்பொருள் சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. சாதி அமைப்பு முறையை மீறிய ஒரு திருமணமும் அதன் விளைவுகளுமே இப்பாடலின் பொருள். இப்பொருள் முத்துப்பட்டன் கதைப்பொருளைப் போன்றதே. |
|
ஆனால் முத்துப்பட்டன் கதையில் கதைத்தலைவன் பிராம்மணன். அவனை மணஞ் செய்து கொண்டவர்கள் கீழ்ச் சாதியினரான சக்கிலியப் பெண்கள். அவன் மணம் செய்து கொண்டதற்காகத் தண்டனை பெறவில்லை. வேறுகாரணத்தால் அவன் உயிர் நீத்தான். |