|
| வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
| பாருலகில் முன்நடந்த பழமை உரைக்கிறேன் |
| |
| துஷ்டருக்கு எத்தனைதான் சொன்னாலும் சொன்னமொழி |
| அக்ஷணமே பொறுத்தல் ஆவதுண்டோ மன்னவனே |
| |
| வஞ்ச அரவினுக்கு வாய்த்தமிர்தம் தானளித்தால் |
| நஞ்சை உதவுமல்லாமல் நல்லமிர்தம் தந்திடுமோ |
| |
| தேள்தனைக் கையால் சேர அணைத்தெடுத்தால் |
| ஆள்தனைக் கொட்டாமல் அமிர்தம் கொடுத்திடுமோ18 |
| |
| நெருப்பைக் கனல்பொறியாய் நேரிட்டு ஒதுங்காமல் |
| விருப்பமுடன் முடிந்தால் வேகாமல் விட்டிடுமோ |
| |
| பாட்டைவைத்19 தானெளிதாய் பார்த்துச் சுழற்றாவிட்டால் |
| வெட்டாமல் விட்டிடுமோ வேந்தரே கேளமைய்யா |
| |
| துஷ்டருக்கு உரைத்தபுத்தி சிறக்குமோ லோகந்தன்னில் |
| இஷ்டமாய் சிறையெடுத்தேன் இது ஒருபெரிதோ முன்னால் |
| |
| திட்டமாய் பெரியோர்பெண்ணைத் தேடியே யெடுத்தபேரை |
| பொட்டெனச் சொல்லுவேனிப்போ புகழுரை செய்குவீரே. |
| |
| வாருமையா ராசாவே ஒருவசனம் உரைக்கின்றேன் |
| பாருமையா யானடியேன் பணிந்து உரைக்கின்றேன் |
| |
| பார்வதியாள் தானிருக்க பரம சிவனாரும் |
| ஓர்சடையில் கன்னிதனை ஒளித்து வாழலையோ |
| |
| நலமுடைய லஷ்மியாள் நன்றாய் அருகிருக்க |
| உலக மளந்ததொரு உத்தமனாம் மாயவனார் |
| |
| தேச மதிலாய் சிறக்கவே கொண்டருளி |
| சத்திய பாமாவைத் தழுவி யணையலையோ |
| |
| அன்ன மதிலேறும் ஆனதொரு பிர்மாவும் |
| வர்ணக் கலைமகளை வாக்கிலே வைத்தருளி |
| |
| தானே படைத்துச் சமைந்ததொரு ஊர்வசியை |
| மானே யெனத்தொடர்ந்து மருவிப் புணரலையோ |
| |
| கந்தனுடன் தெய்வானை கலந்து அருகிருக்க |
| வந்து குறவருட வள்ளிதனைச் சேரலையோ |