பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்63

தாங்கொணாத் துயரால் தாயர்தம் கதறல்,
கைகால் இழந்தோர் கதறும் அழுகுரல்,
வீடுகள் இழந்தோர் விளைத்திடும் கூக்குரல்,
மாடுகள் ஆடுகள் மாண்டன என்றே
ஏழை மாந்தர் எழுப்பிய அலறல்,
சிதைந்த கோலங் காணச் செல்லும்
சிறுசிறு குழுவினர் செய்திடும் பேரொலி,
சிதைந்த குடில்களைச் செப்பஞ் செய்வோர்
எழுப்பொலி அனைத்தும் எழுந்து பரந்தன;
அண்டையில் நின்ற மரங்கள் அனைத்தும்
தம்சிறு குடிலைத் தகர்த்ததை எண்ணிச்
சீற்றங் கொண்டார் போலச் சிற்சிலர்
துண்டு துண்டாய்த் துணித்தனர் உறுப்பினை
முண்டமாய்க் கிடந்தன முழுமரம் அனைத்தும்;
பள்ளிகள் பற்பல பாழாய் நின்றன;
எங்கும் சிதைந்தும் அழிந்தும் இருந்தன;
இல்லம் இழந்த எளியோர் சிந்திய
கண்ணீர் மழைநீர் கலந்து பரவின;
இழப்பொலி இழப்பொலி எங்கும் ஒலித்தன;
அந்தோ அந்தோ அவலம்!
இயற்கை அரசியின் எழுச்சிப் பயனே! 44

(1955-ஆம் ஆண்டில் தமிழகம் எங்கும் வீசிய பெரும்புயலால் நேர்ந்த விளைவுகளைக் கண்டு பாடப் பெற்றது.)