166 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
என்றுரைத்த போதும் இருநிலத்து மாந்தரெலாம் நன்றியின்றிச் செய்துவரும் நாலா யிரம்பிழையும் ஏற்றுப் பொறுக்குமெனை எள்ளி நிலந்தன்னைச் சாற்றும் பொறுமைக்குச் சான்றோர் உவமிப்பர்! செல்வரென அல்லரெனச் சிந்தித்துப் பார்ப்பதிலை அல்லரென நல்லரென ஆய்தல் எனக்கில்லை நெல்லுக்கும் புல்லுக்கும் நேர்நின் றுதவிடுவேன் சொல்லுக்குச் சொல்லவிலை; தோழர் அனைவருமே சாதி சமயங்கள் சண்டையிடுங் கட்சிஎன ஓதி வருவார்கள் ஒன்றையும் நான்பாரேன்;90 எல்லாரும் நல்லரென்பேன் யாவருங் கேளிரென்பேன் பொல்லார் எனவுரையேன் பூணும் பகையறியேன்; ஆனாலும் ஓர்பகைவன் அந்தோ இருக்கின்றான்; மேனாள்தொட் டென்னிடத்து மேவாப் பகைகொண்டான்; தீண்டார் ஒருவருமே *தீயன் அவனென்றே; காண்பார் ஒருவரிலர் காந்தும் குணத்தனென; சின்னவன் என்றென்னைச் சீறிச் சிவந்தெழுவான் அன்னவன் முன்னேநான் ஆர்த்துப் படர்ந்தெழுவேன்; பாவம் அவனுடலம் பாழாய்க் கருகிவிடும்; நாவை அடக்காதார் நைந்தழிவர் ஈதுண்மை;100 காதலால் ஒன்றுபடுங் காளையரும் கன்னியரும் பேதமிலா நெஞ்சாற் பிணைவதுபோல், உண்மையுளங் கொண்டிலங்கும் நட்பினர் கூறுபடலின்றிக் கண்டுணர்ந்து நெஞ்சம் கலந்தொன்றாய்க் கூடுதல்போல் எப்புலத்துச் சார்ந்தாலும் அப்புலத்து வண்ணம்பெற் றிப்புவியில் வாழ்வேன் எனக்கென வண்ணமிலேன்; பள்ளிச் சிறுவர்க்குப் பாரில் எனைப்போல
*தீயன் - நெருப்பு |