பக்கம் எண் :

202கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

எண்ணமெனக் கெங்கெங்கோ ஓடிஓடி
    எனதுதமிழ் நாட்டுநிலை நினைந்த தங்கே;
நண்ணிஎனைத் தோள்தொட்டுக் கம்ப நாடன்
    நலமிக்க வேளாண்மை காண்க என்றான்.14

படியரிசித் திட்டங்கள் அங்கே யில்லை
    படிமுழுதும் நெல்விளைந்து கிடப்ப தாலே;
குடிபுரப்போர் உழமறுப்புச் செய்ய வில்லை
    கொடுமைகளைக் காணாத கார ணத்தால்;
இடுவரம்புச் சட்டங்கள் அங்கே இல்லை
    எழில்வயல்கள் உழவரிடம் இருப்ப தாலே;
படுபொருளைப் பதுக்குகிற பழக்கம் இல்லை
    பார்முழுதும் நினைத்தவெலாம் கிடைப்ப தாலே.15

உரம்போடத் தழையறுப்பர் அன்றி மற்றோர்
    உயிர்போகத் தலையறுக்குந் தொழிலைச் செய்யார்;
தரங்காணும் பயிரறுப்பர் அன்றி மற்றோர்
    தவிதவிக்க உயிரறுக்க நினையார் அங்கே;
வரம்பாடும் களையெடுப்பர் அன்றி மற்றோர்
    வரம்புகளை எடுக்கமனம் விரும்பார் அங்கே;
1அறம்பாடுஞ் செயல்முறைகள் விளைப்ப ரன்றி
    2அறம்பாடும் தீவினைகள் விளையா ரங்கே.16

பலவகைய தொழில் வளங்கள் படைத்து நிற்பார்
    பணிபுரியும் நிறுவனங்கள் அடைத்து நில்லார்;
உலகுடனே தலைநிமிர உழைத்து நிற்பார்
    உண்டாக்கும் பொருள்தடுத்து வளைத்து நில்லார்;
கலகமொடு கயமைசெய விருப்பங் கொள்ளார்
    கடமைகளைப் புரிவதற்கு வெறுப்புங் கொள்ளார்;
பலதொழில்கள் புரிவினைஞர் பகைமை கொள்ளார்
    பாடுபடும் நிலைக்கேற்பப் பயனே கொள்வார்.17


அறம்பாடும் - 1. அறநூலிற்பாடும்; 2. வசைபாடுதல்.