பக்கம் எண் :

80கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

கடவுளும் விதியும் மற்றைச்
      சாத்திரக் கசடு யாவும்
மடமையுள் வீழ்த்து தற்கும்
      மக்களைச் சாய்ப்ப தற்கும்
உடந்தையென் றாகு மானால்
      உலகினர் அவற்றை யெல்லாம்
கடலினுள் வீசி விட்டு
      வழியொன்று காணல் வேண்டும்.

தலைவிதி யென்று நம்பி
      முயற்சியில் தாழ்ந்து போனார்
சிலைகளைக் கடவு ளாக்கிச்
      சீரெலாம் சிதைந்து போனார்
கலையெனச் சாத்தி ரத்தைக்
      கருதியே கவிழ்ந்து போனார்
நிலைமிகத் தாழ்ந்த பின்னும்
      அவற்றையேன் நினைக்க வேண்டும்?

உலகினை உயர்த்து தற்கே
      உழைப்பவர் தாழ்ந்தோர் ஆனார்
பலருடைய உழைப்பை யுண்டு
      பருத்தவர் உயர்ந்தோர் ஆனார்
நலமெலாந் தமதே ஆக்க
      நாடுவோர் ஏய்க்கும் நாள்கள்
நிலவுதல் இனிமே லில்லை
      நிமிர்ந்தனர் தாழ்ந்தோ ரெல்லாம்.

பிறப்பினாற் பொருளால் ஆன
      பிரிவுகள் தொலைக்கும் நல்ல
அறத்தினால் வளரும் நாடே
      அடிமைகள் இல்லா நாடாம்