இரியா இருளை இரியச் செய்வான் பெரியார் அண்ணா பெரும்பணி புரிநாள் இடையறா அப்பணி இடையூ றின்றி நடைபெறப் பேரொளி நல்கிய தக்கதிர்; இருளால் மறைபடும் இனமொழி உணர்வுகள் தெரிதர லாயின தெளிந்தனம் யாமே; தெளிந்தனம் ஆதலின் குழைந்துள பனியில் விழுந்தினி அழியோம் விழிப்புடன் நடப்போம்; விழியொளி பெற்றும் வீழ்ந்ததில் மூழ்கின் பழிபெறும் எம்மினும் இழிந்தவர் இலையால்; விழியுளார் படுகுழி வீழ்வதும் உண்டோ? ஒருகால் உடையவன் ஊன்றுகோல் பெறலாம் இருகால் உடையோன் எவனதை விழைவான்? வளமிலாமொழிகள் வருமொழிச் சொற்களைக் கொளலாம் அதனாற் குற்றமொன் றில்லை; உயர்தனிச் செம்மொழி ஒப்பிலாத் தமிழ்மொழி அயன்மொழிச் சொற்களை அணுகுதல் முறையோ? முட்டிலாச் செல்வர் மற்றவர் பாற்கடன் பெற்றிட முனைதல் பேதைமை யன்றோ? அதனால் சந்தனப் பொதியச் செந்தமிழ் மாமலை தந்தருள் தென்றலில் தனிநடை பயில்வோம்; தளர்நடை தவிர்த்துத் தனிநடை கொடுத்த வளரிளங் கதிரை வாயுற வாழ்த்துவம்; பலமொழி பயின்றும் பைந்தமிழ்ச் சோலையுள் உலவிய தென்றலை உள்ளுறப் போற்றுவம்; இசைத்தமிழ் சுவைத்திட ஈகுவர் பெரும்பொருள்; நாடகத் தமிழ்க்கும் நல்குவர் அவ்வணம்; இயற்றமிழ் எனினோ ஈயார் ஒருபொருள்; |