தீண்டாமை சாதிமதக் குப்பை மாய்க்கும் தீயாகிப் பகுத்தறிவுச் சுடரைப் பாய்ச்சும் தூண்டாத விளக்காகி மாந்த ராகத் தொழும்பர்தமை ஆக்குகிற நெருப்பும் ஆனார். உயர்வானில் சிதறிவிழும் கல்லால் பூமி உருண்டைக்குப் பழுதின்றிக் காக்கும் காற்று; செயலறியா நம்மினத்தார், ஆரி யத்தின் சிந்தனையில் வெடித்துவிழும் கற்கள் தாக்க மயலாகி அழியாமல் பெரியார் காத்தார்; மாந்தரெனப் பழுதின்றி வாழச் செய்தார்; புயல்போலச் சினந்தெழுந்து வீசி னாலும் பூமணக்கும் தென்றலென இனிமை செய்வார். பகலவனும் குளிர்மதியும் விண்ணுக் குண்டு பார்ப்பவர்கள் அளந்தறியா அகலம் உண்டு; பகுத்தறிவுப் பகலவனும் ஆயந்து தோய்ந்து பண்பட்ட கூர்மதியும் அளந்து பார்த்துப் புகலறியாச் சிந்தனையும் பெரியார்க் குண்டு; பொலிவுதரும் * உடுக்கணங்கள் விண்ணுக்குண்டு புகழ்பரப்பும் தொண்டருடுக் கணம்போற் சுற்றிப் பொலிவுதரும் விண்ணாகி விளங்கு கின்றார். அனைத்துலக மாந்தரெனும் குமுகா யத்துள் ஐயாவும் ஓரணுவே; அணுவின் ஆற்றல் கனைத்துவரும் ஆரியமாம் நாக சாகி கனல்விழுந்த பஞ்சாகிப் பொசுங்க வீழ்த்தும்; மனத்துவளர் மடமையெனும் கோட்டை எல்லாம் மண்ணோடு மண்ணாகத் தூள்தூள் ஆக்கும்; இனத்துணர்வைப் பகுத்தறிவை ஆக்கும் ஆற்றல் எந்நாளும் அவ்வணுவுள் நிறைந்தி ருக்கும்.
*உடுக்கணம் - வின்மீன் கூட்டம் |